ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-07-15 04:45 GMT

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-வது வேகமாக பரவி, குழந்தைகள் வாலிபர்கள் வயதானவர்கள் என வயது பேதமின்றி அனைவரையும் பாதித்தது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர், மாநகராட்சி ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வந்தது.

உதாரணமாக தினசரி கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டது. முதலில் 4 ஆயிரம் என்ற அளவில் இருந்த பரிசோதனை தொற்று அதிகரித்ததன் காரணமாக பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. இதன்படி மாநகராட்சி பகுதியில் தினமும் 4000 பேருக்கும், புறநகர் பகுதியில் 6 ஆயிரம் பேருக்கும் என 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம் தொற்று ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன் பயனாக தற்போது மாவட்டத்தில் தொற்றின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகள் குறைந்து தற்போது 43 பகுதிகள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது.

மாவட்டத்தில் தொற்றில் இருந்து 96 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். ஒரு சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்காமல் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News