கொரோனா விதிமீறல்: லட்சுமி நகரில் டீக்கடைக்கு அதிகாரிகள் சீல்
பவானி லட்சுமி நகரில், சமூக இடைவெளியின்றி வியாபாரம் செய்ததால், டீக்கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து, சீல் வைத்தனர்.
கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள், டீக்கடைகள் மற்றும் காய்கறி கடைகளில் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் அணிந்து வரவேண்டும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், பவானி லட்சுமி நகர் பகுதியில் செயல்படும் டீக்கடையில், சமூக இடைவெளி இல்லாமல் மிகவும் நெருக்கமாக அமர்ந்து பலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற கலெக்டர் கதிரவன், வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்து, டீக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து, வருவாய் துறையினர் சம்மந்தப்பட்ட டீக்கடைக்குச் சென்று கடையின் உரிமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்ததோடு, கடைக்கும் 'சீல்' வைத்தனர். மேலும், காலிங்கராயன்பாளையம், லட்சுமி நகர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டீக்கடைகள், மளிகைக்கடைகளில் வருவாய்த்துறையினர் சோதனை செய்தனர்.