வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை ஆட்சியர் ஆய்வு
சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.;
ஈரோடு மாவட்டத்தில் 01.01.2022ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்படி சிறப்பு சுருக்கத்திருத்தத்தில் வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு ஏதுவாக வரும் 31.11.2021 வரை சம்மந்தப்பட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மற்றும் வாக்குச்சாவடி மையங்களிலும், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதள முகவரிகளான www.nvsp.in மற்றும் www.eci.gov.in ஆகியவற்றில் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு மாவட்டத்தில் இன்றைய தினம் மற்றும் நாளை (14.11.2021) ஞாயிறு அன்றும் 2222 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் பணிகள் நடைபெறவுள்ளது. மேலும் சிறப்பு முகாமானது (13.11.2021), (14.11.2021), (27.11.2021), (28.11.2021) ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் பணிகள் நடைபெறவுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான விண்ணப்பங்களை அளித்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர், முகவரி ஆகியவற்றினை திருத்தம் செய்வதற்கும், இறந்த மற்றும் குடிபெயர்ந்த வாக்காளர்களை நீக்குவதற்கும் தக்க ஒத்துழைப்பு நல்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.