பவானி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
பவானி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா நேற்று அதிகாலை சிறப்பு ஆராதனையுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பவானி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா நேற்று அதிகாலை சிறப்பு ஆராதனையுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
ஏசுக் கிறிஸ்து பிறப்பின் தினம் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பவானி சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அதிகாலையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை ஆயர் சாமுவேல் பிரபாகரன் தலைமையில் நடத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சமூக இடைவெளியுடன் அமர்ந்து பிரார்த்தனையில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதில், புத்தாடை அணிந்து குடும்பம், குடும்பமாக வந்த கிறிஸ்துவர்கள் உற்சாகமாய் பங்கேற்றனர்.
மேலும், அண்ணா நகர் பவானி அன்னை ஆலயம், தேவபுரம் அகில இந்திய தேவசபை மற்றும் ஊராட்சிக்கோட்டை, அம்மாபேட்டை, பூதப்பாடி, சிங்கம்பேட்டை பகுதியில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.