ஒலிம்பிக்கில் சாதித்த மாரியப்பனுக்கு முதல்வர் அரசு வேலை தரவில்லை திமுக வேட்பாளர் குற்றம் சாட்டினார்.
ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக பவானி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் துரைராஜை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூத் கலந்து கொண்டு பவானி திமுக வேட்பாளர் துரைராஜ்க்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் பேசுகையில் உலக ஒலிம்பிக் போட்டியில் தடகள போட்டியில் கலந்துகொண்ட சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றார்.அவர் தாய் நாடு திரும்பி தமிழக முதல்வரை சந்தித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு அரசு வேலை தருவதாக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தெரிவித்தார். ஆனால் இதுவரை அவருக்கு அரசு வேலை தரவில்லை. ஒரு மாற்றுத்திறனாளி மாரியப்பனுக்கு கூட அரசு வேலை வழங்காத இவர்கள் தற்போது வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது சாத்தியமா என சிந்தித்து பாருங்கள் என பேசினார். இந்த தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உட்பட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.