பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயம்

Bhavani Sangameshwarar Temple-திருநணா என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் ‘சங்கமேஸ்வரர்’, அம்பிகை ‘வேதநாயகி’ ஆவர்.

Update: 2020-12-23 05:31 GMT

Bhavani Sangameshwarar Temple-பவானி சங்கமேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் திருத்தலங்களில் ஒன்றாகும். காவிரி நதி ஒருபுறமும், பவானி நதி மறுபுறமும் சூழ்ந்திருக்க, எழில் சூழ்ந்த தீவுபோல காட்சியளிக்கிறது பவானி. அம்மன், நதி, தலம் மூன்றிற்கும் பவானி என்றே பெயர். இத்தலம் வந்து நீராடி, இறைவனை தரிசிப்பவர்களுக்கு 'யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது)' என்பதால் இத்தலத்திற்கு 'திருநணா' என்று பெயர் வந்தது.

இங்கு, சங்கமேஸ்வரருக்கு அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வாணிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார் என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு. அதேபோல, அம்பாள் வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என பல திருநாமங்களில் வணங்கப்படுகிறார்.

வட இந்தியாவில் உள்ள அலகாபாத்தில் கங்கையுடன்


யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் 'திரிவேணி சங்கமம்' எனப்படுகிறது. அங்கு சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம் 'தென் திரிவேணி சங்கமம்' என்று அழைக்கப்படுகிறது. நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுதுறை வருவதுண்டு, பவானியில் மூழ்கி எழுந்து, சங்கமேஸ்வரரை வழிபட்டு, தோஷங்களை நீக்குவதற்காக நாடிவருகின்றனர்.

இத்தலத்தில் முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது அடியார்களை பிடித்த சுரநோய் நீங்க ஜுரஹரேஸ்வரரை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார்கள் என்பது வரலாறு. திருஞானசம்பந்தர் மற்றும் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம். இந்த தலத்துக்கு பத்மகிரி என்ற பெயரும் உண்டு. இந்த தலத்தைச் சுற்றிலும் நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி என நான்கு மலைகள் உள்ளன. தேவாரப்பாடல் பெற்ற 274 திருத்தலங்களில், பவானி 207-வது தலமாகப் பாடல் பெற்றுள்ளது.

புராதன வரலாறு

பாற்கடலலில் வந்த அமிர்தத்தில் தேவர்களுக்கு அளித்ததுபோக மீதம் இருந்ததை தவ முனிவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பெருமாள் விரும்பினார். அதனை கருடனிடம் கொடுத்து, பராசர முனிவரிடம் ஒப்படைக்கச் சொன்னார். முனிவர் அமுத கலசத்தை பாதுகாத்து வந்தார், லவணாசூரனின் நான்கு புதல்வர்களும் கலசத்தைத் தேடி பராசர முனிவர் இருக்கும் இடம் வந்தனர். பராசர முனிவர் வேதநாயகியிடம் முறையிட்டார். அன்னையிடம் இருந்து நான்கு சக்திகள் தோன்றி, அசுரர்களை அழித்தது. இதையடுத்து பராசர முனிவர் அமுத குடத்தை திறந்த போது, அதில் லிங்கம் இருந்தது. ஈசன் அங்கு ஓர் அமுத தீர்த்தம் உருவாக்க அது பவானி, காவிரியுடன் கலந்து முக்கூடலாக மாறியது என்று தல புராணம் சொல்லுகிறது.


பூலோகத்தில் உள்ள புனித தலங்களை தரிசிக்க வந்த குபேரன், இந்த தலத்துக்கு வந்தபோது, யோகிகள், ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் தவம் செய்வதைக் கண்டார். அத்துடன், மான், புலி, சிங்கம், பசு, யானை, நாகம், எலி என பல்வேறு உயிரினங்களும் ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவத்தில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதைக் கண்டு குபேரன் ஆச்சர்யம் அடைந்தார். அந்த இடத்தில் தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்த அவர், இறைவனின் தரிசனம் வேண்டி பவானியில் தவம் மேற்கொண்டார்.



குபேரனின் தவத்தால் மகிழ்ந்த சிவனும், திருமாலும் காட்சியளித்து அருள்பாலித்தனர். அத்துடன் அங்குள்ள இலந்தை மரத்தின்கீழ் சுயம்பாகத் தோன்றி அருள்புரிந்தார் ஈசன். அப்போது, அளகேசன் என்ற பெயரால் இத்திருத்தலத்தில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டுமென குபேரன் வரம் கேட்டுப் பெற்றார். அன்றிலிருந்து இத்தலம், 'தட்சிண அளகை' என்ற பெயர் பெற்றது. சிவனுக்கு இடப்பக்கம் ஆதிகேசவப் பெருமாளாக திருமால் எழுந்தருளினார்

ராஜ கோபுரம் :

மூன்று நதிகளும் கூடும் இடத்திற்கு வட கரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோவிலின் ராஜகோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும், 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது.

குபேரன் தரிசித்த தலம் :


பூலோகத்தில் உள்ள புனிதத் தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரன், இந்தத் தலத்துக்கு வந்தபோது ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் தவம் செய்வதைக் கண்டான். மேலும், மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி உள்ளிட்ட உயிரினங்களும் சண்டையின்றி, ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்து ஆச்சரியமடைந்தான். அங்கு குபேரன் செய்த தவத்தில் மகிழ்ந்து, ஹரியும் சிவனும் அவனது விருப்பப்படி இந்தத் தலம் 'தட்சிண அளகை' என்று அழைக்கப்படும் என்றும் அருள் செய்தனர்.

சூரிய பூஜை :

ஆண்டுதோறும் மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாம் நாளன்று சூரிய ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது பட்டு, சூரிய பூஜை நடப்பது சிறப்பானது.

அம்பிகை சன்னிதி :


அம்பிகை வேதநாயகி சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதற்கு வலப்பக்கம் சுப்பிரமணியர் சன்னிதி இருக்கிறது. சுப்பிரமணியர் சன்னிதியைக் கடந்து அமைந்துள்ள மூலவர் சங்கமேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்கிறார். இங்கு, வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோயில், ஸ்ரீ தேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஆகியவை உள்ளன. அம்மன் சன்னதிக்கும், ஈஸ்வரன் சன்னதிக்கும் இடையே முருகன் சன்னதி அமைந்துள்ளது. இது சோமஸ்கந்த அமைப்பு கோயிலாகும். அருணகிரிநாதரின் திருப்புகழில் இந்த சன்னதி குறித்து பாடப்பட்டுள்ளது. கோயிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.

தல விருட்சம் இலந்தை :


இக்கோவிலின் தல விருட்சம் இலந்தை மரம். வேதமே மரத்தின் வடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சக்தி வாய்ந்தவர் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக, இங்குள்ள உள்ள அமுதலிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும்.

சங்கமேஸ்வரர் கோயிலில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ராஜகோபுரம், வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

இக்கோபுரத்தையொட்டி வைகுண்டவாசலும் உள்ளது. இக்கோயிலில் உள்ள கல் சிற்பங்கள், புராணக் கதைகள், தேவாரக் கதைகளை விளக்குவதுபோல அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தல விருட்சம் இலந்தை மரம். இறைவனை வேண்டி இக்கனியை உண்டால் மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

ஆண்டுதோறும் மாசி மகம் ரத சப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி, சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் மீது விழுவது சிறப்பம்சம்.


பவானி கூடுதுறையில் மூழ்கினால் எக்காலத்திலும் பயன் கிடைக்கும். ஆயினும், ஆடி 18, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கூடுதல் சிறப்பு. சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா, தேரோட்டத்துடன் விமரிசையாக ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதேபோல, சிவராத்திரியன்றும் ஏராளமான பக்தர்கள் பவானிக்கு வருகின்றனர். மறைந்த முன்னோருக்கு அமாவாசை நாட்களில் கூடுதுறையில் தர்பணம் செய்வதற்கும், பிண்டம் கொடுப்பதற்கும் ஆயிரக்கணக்கானோர் வந்து, செல்கின்றனர்.

ஆடி மாதம் 18-ம் தேதி பக்தர்கள் கூட்டத்தால் பவானி நிரம்பி வழியும். கூடுதுறையில் கூடும் சுமங்கலிப் பெண்கள், தேங்காய், பழம், பூ, காதோலைக் கருகமணி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து வழிபடுவர். காவிரி அம்மனுக்கு தீபாராதனை செய்து, மாங்கல்யம் நிலைக்கவும், திருமணமாகாதவர்கள் திருமணம் கைகூடவும் வேண்டி மஞ்சள் நூலை கையில் அணிந்து கொள்வர். பூஜை செய்த பொருட்களை ஆற்றில் விட்டு வழிபடுவர். புதுமணத் தம்பதியினர், காவிரித் தாய்க்கு பூஜை செய்து, தாங்கள் திருமணத்தன்று அணிந்திருந்த மணமாலைகளை எடுத்து வந்து ஆற்றில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பரிகாரத்தலம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், பவானியில் அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் செய்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கூடுதுறையில் நீராடி, விநாயகரையும், சங்கமேஸ்வரரையும் வழிபட்டு, இங்குள்ள இலந்தைப் பழங்களை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மாந்தி தோஷம், குளிக சாந்தி தோஷம் உள்ளவர்கள் மாந்தி கிரகத்தின் ரூபத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் சனி பகவானை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

காய்ச்சல், தோல் வியாதி, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோயிலில் உள்ள ஜுரஹரேஸ்வரர் சன்னதியில் அபிஷேகம் செய்து, மிளகு ரச சாதத்துடன், அரைக்கீரை கூட்டு நைவேத்தியம் செய்தால் உரிய நிவாரணத்தை பெறலாம். வாயு சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு வில்வத்தால் அர்ச்சித்து அதனை உணவில் சேர்த்தால் நலம் பெறுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது.

அகால மரணம் அடைந்தவர்களுக்கு பவானியில் ' நாராயண பலி' பூஜை செய்யப்படுகிறது. நாகதோஷம் உள்ளவர்கள் கல்லில் செய்த நாகரைக் கொண்டு வந்து, ஆற்றின் கரையில் உள்ள விநாயகர் அருகே பிரதிஷ்டை செய்தால் தோஷம் நீங்கும் என்றும், செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், வாழை மரத்துக்கு தாலி கட்டி, அதை ஆற்றில் விடுவதும், பெண்கள் அரசங்கொத்துக்கு பூஜை செய்து ஆற்றில் விடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கலெக்டர் உயிரைக் காத்த வேதநாயகி :

1804-ம் ஆண்டில் ஈரோடு மாவட்டம்தனியாக பிரிக்கப்படாமல் கோயம்புத்தூர் மாவட்டத்துடன் இணைந்திருந்தது. கலெக்டராக வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் இருந்த்தார். 1804-ம் வருடம் ஜனவரி 11-ம் நாளன்று கடுமையான மழையுடன், இடியும் மின்னலுமாய் இருந்தது. அந்த இரவு நேரத்தில், கோவில் வளாகத்துக்கு வெளியே குடியிருப்பு வளாகத்தில் உள்ள அறையில் கலெக்டர் வில்லியம் காரோ உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. உடனே வெளியே வந்த கலெக்டரை, ஒரு சிறிய பெண், 'உடனே வெளியில் வாருங்கள்.. ஆபத்து..' என கூறி அழைத்தாள். அதிர்ச்சியுடன் அவளைப்பின் தொடர்ந்து கோவில் வரை சென்ற கலெக்டர், அந்தப் பெண் வேதநாயகி சன்னிதிக்குள் சென்று மறைந்து விட்டதை கண்டு வியப்போடு நின்று விட்டார். அந்த நேரத்தில் அவர் குடியிருந்த பங்களா இடிந்து விழுந்தது கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

தன்னுடைய உயிரைக் காப்பாற்றியதற்காக, அம்பிகை வேதநாயகிக்கு காணிக்கையாக தந்தத்தில் கட்டில் ஒன்று செய்து அவரது கையொப்பமிட்டு ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். இன்றும் இந்த உண்மைக்கு எடுத்து காட்டாக இந்த தந்தக் கட்டில் அங்கே இருக்கிறது.

சங்கமேஸ்வரர் கோயில் காலை 6 மணி முதல் பகல் 1 வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

படங்கள் : திருநாணா சுப்பு 



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News