ஈரோடு மாவட்டம் பவானி அருகே தொழிலாளியை வெட்டிய முதலாளி கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆப்பக்கூடல் ஒரிச்சேரியை சேர்ந்தவர் சதீஷ்குமார்.இவர் தளவாய்பேட்டை பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில், இவரது வீட்டின் முன்பு மர்மநபர்கள் நான்கு பேர் அரிவாளால் சதீஷ்குமாரை வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார் சத்தம் போட்டதில் அருகில் இருந்தவர்கள் அங்கே வந்துள்ளனர். இதையறிந்த மர்ம நபர்கள் நான்கு பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பின்னர் படுகாயமடைந்த சதீஷ்குமாரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரித்து வந்த நிலையில், தளவாய்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் சதீஷ்குமார் நீண்ட நாட்களாக வேலை செய்து வந்ததும், இவரிடம் வேலை செய்யும் போது சரியாக வேலைக்கு வராத காரணத்தினால் சதீஷ்குமாரை வேலையை விட்டு நிறுத்தி விட்டனர். இதன் காரணமாக தொழிலாளிக்கும் , முதலாளிக்கும் முன்விரோதம் ஏற்பட்டு நேற்று முன்தினம் காலை அவரது வீட்டில், சதீஷ்குமாரை வெட்டியது தெரியவந்தது.
மேலும் சதீஷை வெட்டியது, மணிகண்டன், மற்றும் அவரது உறவினரான ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தபிரபு, தளவாய்பேட்டையை சேர்ந்த நண்பர்கள் சூரியகுமார், ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலபதி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் நான்கு பேரையும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், நேற்று லட்சுமிநகர் வாகன சோதனையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மணிகண்டனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தன்னை வேலையிலிருந்து நிறுத்தியதால் ஏற்பட்ட கோபத்தில் சதீஷ்குமார் பொது இடங்களில் தன்னை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து சதீஷ்குமாரை வெட்டியதாக கூறியுள்ளார். மேலும் இவர்களிடமிருந்து ஒரு வீச்சரிவாள், இரண்டு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பவானி நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். இதனிடையே காயம்பட்டு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.