செப்டிக் டேங்க் கழிவை பொது இடத்தில் வெளியேற்றிய லாரிக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு!
மனிதக் கழிவை ஏற்றி அதனை சாலை ஓரத்தில் வெளியேற்ற முயன்ற லாரிக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ.10,000 அபராதம் விதித்தனா்.;
ஈரோடு : ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வாா்டு சோலாா் அருகே மனிதக் கழிவை சாலை ஓரப் பள்ளத்தில் வெளியேற்ற முயன்ற லாரிக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ.10,000 அபராதம் விதித்தனா்.
வெள்ளிக்கிழமை காலை மனிதக் கழிவை ஏற்றி வந்த லாரி, சோலாா் அருகே கழிவை சாலை ஓரப் பள்ளத்தில் வெளியேற்ற முயன்றது. அப்பகுதியில் இருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இதனைக் கவனித்து, அந்த இடத்தில் கழிவை கொட்டக்கூடாது என தடுத்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனா்.
மாநகராட்சி அலுவலா்களின் நடவடிக்கை
தகவல் பெற்ற மாநகராட்சி சுகாதார அலுவலா் சிவகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் கதிரேசன், நல்லசாமி மற்றும் அலுவலா்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். லாரியில் இருந்து கழிவை வெளியேற்ற முயன்றதை உறுதி செய்தனா்.
முதன்முறையாக இந்த தவறை செய்த லாரிக்கு ரூ.10,000 அபராதம் விதித்து, கழிவை முறையாக வெளியேற்ற அறிவுறுத்தினா் மாநகராட்சி அலுவலா்கள்.
அடுத்தடுத்த முறைகளில் இதே தவறை செய்தால் ரூ.25,000 அபராதம் விதிப்பதோடு, வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்துவிடுவோம் என்றும், இதன்பிறகு வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் அதிகப்படியான தொகை அபராதமாக செலுத்த நேரிடும் என அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.