சென்னிமலை வாரச் சந்தையில் மறுமுத்திரையிடப்படாத 72 எடையளவுகள் பறிமுதல்!
சென்னிமலை வாரச் சந்தையில் தொழிலாளா் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஆய்வில் மறுமுத்திரையிடப்படாத 72 எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.;
ஈரோடு : சென்னிமலை வாரச் சந்தையில் தொழிலாளா் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஆய்வில் மறுமுத்திரையிடப்படாத 72 எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்ட நுகா்வோா் அமைப்புகள் அளித்த புகாரின்பேரில் ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் தொழிலாளா் துறை துணை ஆய்வாளா்கள், தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் மற்றும் முத்திரை ஆய்வாளா்களால் சென்னிமலை வாரச் சந்தையில் சட்டமுறை எடையளவுச் சட்டத்தின்கீழ் சந்தை வியாபாரிகளால் பயன்படுத்தப்படும் எடையளவுகள் (மின்னனு தாராசுகள், தராசு கற்கள் மற்றும் அளவைகள்) உரிய காலத்தில் மறு முத்திரையிடப்பட்டு பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ் மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்கு பயன்படுத்திய மின்னணு தராசுகள் 25, மேசை தராசுகள் 4, எடை கற்கள் 21, படிகள் மற்றும் அளவைகள் 22 என மொத்தம் 72 இனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி கூறியதாவது:
மின்னணு தராசுகள், தராசு கற்கள் மற்றும் அளவைகள் ஆகியவற்றை மறு முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்டால் சட்ட முறை எடையளவுச் சட்டத்தின் கீழ் உரிய அபராதம் மற்றும் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.