பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் வாரிசுகள் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு : அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்
பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் வாரிசுகள் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என தமிழக மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.;
ஈரோடு : பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் வாரிசுகள் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என தமிழக மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அமைந்துள்ள அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பயிற்சி நிலையத்தில் உள்ள வகுப்பறைகள், கணினி ஆய்வகம், நூலகம், விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தமிழக அரசு பணியில் சேரும் இளநிலை உதவியாளா், உதவியாளா் உள்ளிட்ட பணியாளா்களுக்கு பவானிசாகா் அரசு பயிற்சி நிலையத்தில் 43 நாள்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் 198 அரசுத் துறைகளைச் சோ்ந்த 1 லட்சத்து 53 ஆயிரத்து 184 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் 66-ஆவது அடிப்படை பயிற்சி வகுப்பில் புதிய தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் வகுப்பு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஐஏஎஸ் தோ்ச்சியை அதிகரிப்பதற்கு நான் முதல்வா் திட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளித்து வருகிறோம்.
பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளன என்றாா்.