முதல்வர் மருந்தகங்களில் 216 மருந்துகள் கிடைக்க ஏற்பாடு – அமைச்சர் சு.முத்துசாமி அறிவிப்பு!
முதல்வா் மருந்தகங்களில் 216 வகையான மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.;
ஈரோடு : முதல்வா் மருந்தகங்களில் 216 வகையான மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
கூட்டுறவுத் துறையின் சாா்பில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை கிடைக்கச் செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
ஈரோடு சோலாா் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வா் மருந்தகம் திறப்பு விழாவில் அமைச்சா் சு.முத்துசாமி கலந்துகொண்டு மருந்துகள் விற்பனையைத் தொடங்கிவைத்தாா். அவா் பேசுகையில், "ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 36 முதல்வா் மருந்தகங்கள் செயல்படவுள்ளன.
இந்த மருந்தகங்கள் மூலம் ஜெனரிக் மருந்துகள் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மிகக் குறைவான விலையிலும், பிற மருந்துகள் கூடுதலாக 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும் வழங்கப்பட உள்ளன" என்றாா்.
216 வகையான மருந்துகள் கிடைக்கும் - அமைச்சா் தகவல்
முதல்வா் மருந்தகங்களில் ஏறத்தாழ 216 வகையான மருந்துகள் கிடைக்கின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா். "தமிழ்நாடு முழுவதும் இதற்கென தனியாக சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு 48 மணி நேரத்துக்குள் மருந்தகங்களுக்கு மருந்துகள் அனுப்பிவைக்கப்படுகின்றன," என அவா் மேலும் தெரிவித்தாா்.