தேர்தல் போர்க்களத்தில் சிப்பாய்களாக இருந்து எதிரிகளை ஓட ஓட விரட்ட வேண்டும் என ஈரோட்டில் அதிமுகவினர் மத்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் இளம்பெண்கள் இளைஞர் பாசறை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார் .அப்போது அவர் கூறியதாவது:- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் எனது மறைவுக்குப் பின்னால் நூறு ஆண்டுகள் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என்றார். அதை நிரூபிக்கும் வகையில் நீங்கள் (பெண்கள்) தேர்தலில் முழு வீச்சில் ஈடுபட்டு அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும். நீங்கள் தேர்தல் போர்க்களத்தில் சிப்பாய்களாக இருந்து எதிரிகளை ஓட ஓட விரட்ட வேண்டும்.
பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக உள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற நீங்கள் பாடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், தங்கமணி மாநில வர்த்தக அணி செயலாளர் சுந்தர் ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.