கிராம சபையை அரசியல் சபையாக மாற்ற முயற்சி : ஈரோட்டில் ஜி.கே.வாசன்
கிராம சபையை அரசியல் சபையாக மாற்ற திமுக முயற்சிக்கிறது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என ஈரோட்டில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு .
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளைத் தொடங்குவதற்கு தமாகா சார்பில் மண்டலக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது, இன்று கோவை மண்டலக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது, செய்தியாளர்களை சந்தித்த போது அவர் தெரிவித்ததாவது :
நேற்று தென் மண்டல கூட்டம் வெற்றிகரமாக நடந்தது. இன்று கோவை மண்டலக் கூட்டம் நடந்து முடிந்து இருக்கிறது. நாளை திருச்சியில் டெல்டா மண்டலக் கூட்டம் நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை சென்னை மண்டலக் கூட்டம் சென்னையில் நடக்கவுள்ளது. அதன்பின், இந்த மாதத்தில் தமிழகத்தை இரு மண்டலமாகப் பிரித்து தமாகாவின் இளைஞர் அணியின் செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா மற்றும் அனைத்து கூட்டணிக் கட்சிகளுடைய வெற்றிவாய்ப்பை உறுதி செய்து கொள்வதே இந்த கூட்டங்களின் நோக்கமாகும். தேர்தல் அதற்குண்டான தொகுதி, எண்ணிக்கை இதனை விட இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும் அதுதான் எங்கள் இலக்கு மற்றும் நோக்கமாகும். தொடர்ந்து படிப்படையாக தமாகா தனது பலத்திற்கு ஏற்றவாறு தொகுதிகளை, எண்ணிக்கைகளைப் பெற்று அதிலே முழு வெற்றியைப் பெற வேண்டும் என்று நாங்கள் எங்கள் செயல்பாட்டிலே இறங்கியுள்ளோம்.
தென்மண்டலக் கூட்டம் மற்றும் இன்றைய கோவை மண்டலக் கூட்டத்திலும், எந்தெந்த பகுதியிலே, எந்தெந்த மாவட்டத்திலே, எந்தெந்த தொகுதியிலே, இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் நிற்கக்கூடிய வாய்ப்பு, நிலை, அந்த பகுதியிலே அவரது செல்வாக்கு, இயக்கத்தின் பணிகளைத் தெரிந்து, அந்தந்த தொகுதிகளின் மீது அதிக கவனம் செலுத்தி, அடித்தளப் பணியைத் தொடங்க வேண்டும். மற்ற தொகுதிகளிலே, நம்முடைய கூட்டணிக் கட்சிகளோடு வெற்றிபெறக் கூடிய நிலையை ஏற்படுத்த பணிபுரிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
தமிழகத்தில் ஆளுகின்ற அதிமுக மக்களுடைய மனநிலையைத் தொடர்ந்து பிரதிபலிக்கிற ஆட்சியாக, அதிமுக அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக அணி. பொதுவாக எல்லா மாநிலத்திலும் ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சியாகத்தான், எதிர்கட்சி சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் செயல்படும். ஆனால், தமிழகத்தில் திமுக கூட்டணி தமிழக மக்களுக்கு ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சியாக, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எதிர்கட்சியாக இல்லாமல், மக்களுக்கே எதிர்க்கட்சியாகச் செயல்படக் கூடிய நிலையிலேயே, திமுக கூட்டணி உள்ளது. ஆளுகட்சிக்கு எதிரிக் கட்சியாகச் செயல்பட்டால் பராவாயில்லை. ஆனால், அரசியல் காரணங்களுக்காக, தேர்தலில் வெற்றி பெற வேண்டு என்பதற்காக, தொடர்ந்து அடுக்கடுக்காக, தவறான செய்திகளைப் பரப்புவது, பொய்ப்பிரச்சாரம் செய்வதை வழக்கமாக வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்ற நினைப்பது ஒருபோதும் ஏற்புடையதல்ல. இதன் காரணமாக தமிழகத்தின் எதிர்கட்சி, இன்றைக்கு வாக்காளர்களுக்கு எதிரிக்கட்சியாக மாறிக் கொண்டு இருக்கிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் தமாகா தனிச்சின்னத்தில்தான் போட்டியிட்டது. அதனால், எங்கள் கூட்டணியில் தனிச்சின்னம் என்பது போன்ற சங்கடங்கள் பிரச்சினைகள் எல்லாம் இல்லை. திமுக கூட்டணியில் தான் அவை உள்ளன. சட்டமன்றத் தேர்தலில் இன்னும் அது தொடர்கிறதாக தெரிகிறது.
வேளாண் சட்டங்களைப் பொறுத்தவரை விவசாயிகளை ஒருசிலர் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்களுடைய லாபத்திற்காக விவசாயிகள் நஷ்டப்பட்டால் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். விவசாயிகளிடம் அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் சந்தேகங்களை, அச்சங்களைத் தீர்த்து வருகிறது. மாற்று இருந்தால் செய்வதற்கான பேச்சுவார்த்தையைத் தொடரலாம் என்று சொல்கிறது. ஆனால், கடந்த 10 நாட்களாக எதிர்கட்சிகள் தங்களது அரசியல் லாபத்திற்காக மட்டுமல்லாமல், தரகர்களோடு சேர்ந்து கொண்டு விவசாயிகளை, குளிரிலே பலி வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ள நிலையில், பெரும்பாலான விவசாய சங்கங்கள் அந்த கூட்டத்திற்கு வருகிறார்கள். ஏற்கனவே நடந்த கூட்டங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இப்படி இருக்கும்போது, பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த 99 சதவீதத்தினர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நாளை கூட்டத்தில் நல்லது நடக்கக்கூடாது என இன்றே 26-ம் தேதி டிராக்டர் ஊர்வலம் நடத்துவதாக அறிவிக்கின்றனர். அப்பாவி விவசாயிகளை, எதிர்கட்சிகள் அரசியல் நோக்கத்திற்காக பழிவாங்க வேண்டாம். அரசுடன் நாளை நடக்கும் பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வெற்றி காண வேண்டும். சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் விவசாயிகளின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் நலன்சார்ந்த அரசாகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. மாநில அரசு பல கோடி ரூபாய்க்கு இடுபொருட்களை வாங்க நிதியுதவி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வாஜ்பாய் பிறந்தநாளின்போது, விவசாயிகளுக்கு பலகோடி ரூபாய் சலுகைகளைக் கொடுத்துள்ளது.
விவசாயிகளின் வளர்ச்சி, வாழ்வாதாரத்தை உயர்த்தும் அடிப்படையிலேயே வேளாண் சட்டங்கள் கொண்டுவந்துள்ளது. இதில் மாற்றங்களைக் கொண்டு வர அரசு தயாராக இருக்கும் போது, விவசாயிகள் சுமூகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வர் வேட்பாளர் குறித்து அகில இந்திய பாஜக தங்களுடைய கூட்டத்தில் வெளிப்படுத்துவார்கள். அந்த அதிகாரம் எனக்குக் கிடையாது. மத்திய பாஜகதான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். எங்களது கூட்டணி வெற்றிக் கூட்டணி, அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என தமிழக பாஜக தலைவர் முருகன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் வரும்போதெல்லாம், மக்களை ஏமாற்றுவதற்கு ஊழல்புகார் கூறினால், அதை வாக்காளர்கள் ஏற்றுக் கொண்டு எதிர்கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்றால், யார், யாரை ஏமாளியாக்குவார்கள் என்பதை தேர்தல் முடிவின்போது தெரியும்.
இந்த ஆட்சி தொடர்ந்து அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் செய்யக்கூடிய தொடர் அறிவிப்புகள், பணிகள், முதல்வர், துணைமுதல்வர் செயல்பாடு, சுற்றுப்பயணத்தைப் பார்க்கும்போது, தமிழக மக்களின் எண்ணங்களைத் தொடர்ந்து பிரதிபலிக்கின்றனர் என்பதிலே மாற்றுக் கருத்து கிடையாது.
பல கூட்டங்களில் துணை முதல்வர் பங்கேற்றுள்ளார். இந்த தேதியில்தான் பிரச்சாரம் ஆரம்பிக்க வேண்டும் என்று கணக்கு எந்தக் கட்சிக்கும் கிடையாது. எந்த கூட்டணிக் கட்சியும் இன்னும் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவில்லை. எல்லோருக்கும் ஒரு கணக்கு உண்டு. பொதுவாக, அரசியல் களம், தேர்தல் என்றால் எப்படி நடக்கும் என உங்களுக்குத் தெரியும். இந்தமுறை சிலர் முன்னதாகத் தொடங்குகின்றனர்.
தேமுதிக எவ்வளவு சீட் கேட்கின்றனர் என்று எனக்குத் தெரியாது. தமாகவின் பலத்திற்கு ஏற்றவாறு எல்லா மாவட்டங்களிலும், தொகுதிகளைப் பெறும் வகையில் அதிமுகவுடன் கலந்து சுமூகமான முடிவினை ஏற்படுத்துவோம் என்று எங்கள் கட்சி மண்டல நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் தமாகாவின் விருப்பம். தமாகாவின் அரசியல் நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும். எங்களைப் பொறுத்தவரை பொதுவாழ்விற்கு வருவார் என்று ரஜினிக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. அவர் வரவில்லை என்பதற்கான காரணமும் சரியானது. இந்த தேர்தலில் நல்லவர்களை ஆதரிக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு பலகோடி ரூபாய் நிலுவைத்தொகை உள்ளது. அதை அவ்வப்போது படிப்படியாக அரசு கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இருந்தாலும் அது போதாது. விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிலுவைத்தொகையைக் கொடுக்க வேண்டும் என நாங்களும் வலியுறுத்துகிறோம்.
எந்த கட்சியும் எந்த தொகுதி, எத்தனை இடம் என வெளிப்படையாக நிபந்தனை விதித்து கூட்டணியில் சேர்வதில்லை. அதற்கென ஒரு முறை இருக்கிறது. ஒரு நேரம் இருக்கிறது. அதைப் பின்பற்றுவதுதான் நல்ல கூட்டணிக்கு அழகு. நாங்க அதைப்பின்பற்ற வேண்டும் என நினைக்கிறோம்.
புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க தொடர்ந்து நிதி உதவியை மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டே இருப்போம். உலக அளவில் கரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஜாக்கிரதையாக, பொறுப்பாக, மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
அரசுக்கு நிறைய தகவல்கள் கிடைத்து இருக்கும். அதன் அடிப்படையில் அதிமுக ஒரே கட்டமாக தேர்தலை நடத்தலாம் என தெரிவித்து இருக்கலாம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் இரண்டு கட்டமாகக் கூட நடத்தலாம் என்பது எங்களது நிலைப்பாடு.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பொறுத்தவரை, காங்கிரஸ், திமுகவைப் பொறுத்தவரை வெற்றிபெற்றால் ஒரு யோசனை, தோற்றால் ஒரு யோசனை சொல்வார்கள். அது மக்களுக்குத் தெரியும். அவர்கள் மாநிலத்தில் ஒன்றும், அடுத்த மாநிலத்தில் ஒன்றும் சொல்வார்கள்.
தேவேந்திரவேளாளர் குல வேளாளர் என பல ஜாதிகளை இணைத்து அங்கீகாரம் வழங்க எதிர்ப்பு இருந்தால், அது நியாயமான காரணமாக இருந்தால், அரசு பரிசீலித்து செய்ய வேண்டும்.
கிராமவளர்ச்சியை கருத்தில் கொண்டுதான் கிராமசபைக் கூட்டம் நடத்தபப்டுவதுதான் முறை. இந்த கிராமசபையை திமுக தேர்தலுக்காக அரசியல் சபையாக, மாற்ற வேண்டுமென நினைத்தால், அதை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. கிராமசபை என்ற பெயரிலே, அவர்கள் மக்களை அங்கே கட்டாயபப்டுத்தி உட்கார வைத்தாலும் கூட, மக்கள் அங்கே பொழுதுபோக்காக உட்கார்ந்து கொண்டு திரும்பி வந்து விடுவார்கள். அவர்கள் அரசியல் பிரச்சாரங்களை கிராம மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. அது தேவையற்ற ஒன்று. வேனில் பேசலாம், நேராக கூட்டம் பேசலாம். இல்லாத ஒன்றை ஏன் ஏற்படுத்துகிறீர்கள். 2500 ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுத்தால், 5000 கொடுக்க வேண்டும் என அதைத் தடுக்கின்றனர். நீதிமன்ற வாசல் வரை போகிறார்கள். மின்கிளினிக் அமைக்கப் பட்டதால் சிறு பகுதியில் வாழும் ஏழை மக்கள் உடல் நலம், சுகாதாரம் காக்கப்படும், அதையும் தடுக்க வேண்டும் என திமுக நினைத்தால், எதிர்கட்சி அதிமுகவிற்கா, அல்லது மக்களுக்கா என்ற சந்தேகம் வந்து விடும்.
- ஈரோடு தேசியநெடுஞ்சாலை அருகே சித்தோட்டில் 200 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு உலக தரம் வாய்ந்த விளையாட்டு கிராமம் அமைக்க வேண்டும்.
- பவானியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். ஊராட்சிக்கோட்டை புதிய குடிநீர் திட்டப்பணிகளை விரைவுபடுத்தி உடனடியாக புதிய குடிநீர் இணைப்புகளை வழங்கிட வேண்டும்.
- பவானிசாகர் அணை அமையக் காரணமான தியாகி ஈஸ்வரனுக்கு சிலை அமைக்க வேண்டும்.
- அவிநாசி - அத்திக்கடவு திட்டப்பணி துரிதமாக நடக்க காரணமான தமிழக முதல்வருக்கு நன்றி. இதில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும்.
- கோவை -பவானி இடையே இருபுறம் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்
- திருப்பூர் பனியன் தொழில் கரோனாவால் பாதிப்பு. மூலப்பொருள் விலையேற்றம் கவலையளிக்கிறது. நூல் விலை, உப விலையேற்றம் உள்ளது. மத்திய அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். 15 லட்சம் தொழிலாளர்க்ள் இதனை நம்பி இருக்கின்றனர். திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.
- நிலுவையில் உள்ள இ.எஸ்.ஐ பணியை முடிக்க வேண்டும்.
- ஈரோடு மேட்டூர் - உபரிநீர் திட்டம் மூலம் குளம், குட்டை நிரப்ப வேண்டும். சாயக்கழிவு காவிரி ஆற்றில் கலப்பதைத் தடுக்க வேண்டும்.
கைத்தறி, விசைத்தறியாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கி வாழ்வாதாரம் உயர்த்த என என்னிடம் கோரிக்கை கொடுத்துள்ளனர். தமிழ்நாடு நெசவு தறிக்காரர்கள் வாழ்வுரிமை இயக்கம் அளித்த மனுவை மாநில துறை அமைச்சரிடம் கொடுக்கவுள்ளோம் என்று பேசினார்.