தனியார் சமையல் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து 3 கோடி மதிப்பில் பொருட்கள் சேதம்
ஈரோடு அருகே தனியார் சமையல் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 3 கோடி மதிப்பில் பொருட்கள் சேதம் அடைந்தது.
ஈரோடை அடுத்து உள்ள வாய்க்கால்மேடு பிச்சாண்டாம்பாளையத்தில் கார்த்திக் என்பவருக்கு சொந்தமான தனியார் ஆயில் மில் உள்ளது.இங்கு சமையல் எண்ணெய் தயாரிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய் ஆலையில் இன்று வழக்கம்போல் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது பாய்லரில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது.இந்த தீயானது ஆலை முழுவதும் பரவியது. சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த ஈரோடு , பெருந்துறை ,சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பாய்லரில் எண்ணெய் அழுத்தம் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் , இந்த தீ விபத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் எண்ணெய் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பயங்கர தீவிபத்தின் போது முன்னெச்சரிக்கையாக பணியாளர்கள் அனைவரும் வெளியேறியதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.