மீண்டும் ஓ.பி.எஸ்.சிடம் சிக்கியுள்ள எடப்பாடி
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஓ.பி.எஸ்.சிடம் வசமாக சிக்கியுள்ளார்
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிமுகவே பரபரத்து காணப்படுகிறது.. கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, வேட்பு மனு தாக்கலில், தவறான தகவலை அளித்ததாக எடப்பாடி மீது புகார் எழுந்துள்ளது. அதாவது, தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த மிலானி என்பவர், கடந்த மாதம் சேலம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை தந்திருந்தார்.
இந்த புகாரில், எடப்பாடி பழனிசாமி, கடந்த சட்டசபை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார்.. இந்த தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி பிரமாண பத்திரத்தில், சொத்து விவரம் பற்றிய தவறான தகவல்கள் அளித்திருக்கிறார். அதனால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையும் விசாரணை நடத்தி உண்மை இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கலாம் என்று கோர்ட் தெரிவித்தது. இது தொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை துவங்கினர். அதன்படி, எடப்பாடி பழனிசாமி வங்கி கணக்கு, அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், படிப்பு போன்றவை குறித்து விரிவாக விசாரணை மேற்கொண்டனர்.
இறுதியில், விசாரணை அறிக்கையை சேலம் முதலாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்திலும் குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர். அறிக்கையில் சொத்து விவரம் எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்று போலீசாரிடம் கேட்ட போது, அதற்கு பதிலளிக்க மறுத்து விட்டனர். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்படலாம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
இரண்டாவது சிக்கலாக ஓபிஎஸ் உருவெடுத்துள்ளார். காரணம், இந்த வழக்கில் சாட்சியாக ஓபிஎஸ் சேர்க்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்பு மனுவில் அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ், அன்று கையழுத்திட்டதால், இப்போது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். எடப்பாடிக்கு எதிராக கேஸ் போட்டிருக்கும் மிலானி என்பவர், ஓபிஎஸ்சுக்கு தெரிந்தவர் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கொளுத்திப் போட்டு வரும் சூழலில், இந்த வழக்கின் சாட்சியாகவே, ஓபிஎஸ்ஸை கொண்டுவர திட்டமிடப்பட்டதாம்.. அதனால்தான், அவரை இந்த வழக்கில் வலிய சேர்த்திருக்கிறதாம்.
மூன்றாவது சிக்கல் என்னவென்றால், வழக்கறிஞர் மிலானி தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலும் உண்மை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், சொத்து விவரங்கள் தவறாக இருப்பதாக விசாரணை அறிக்கையிலும் குற்றப்பிரிவு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளதாம். எடப்பாடிக்கு எதிராக போடப்பட்டுள்ள இந்த வழக்கின் போக்கினை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையும் கண்காணித்து வருவது,நான்காவது சிக்கலாக எடப்பாடிக்கு உருமாறி உள்ளது
அதுமட்டுமல்ல, உயர்நீதிமன்ற உத்தரவின்படி அறிக்கை தாக்கல் செய்ய சேலம் மாவட்ட காவல்துறையும் தயாராகி வருகிறதாம். இப்படி 4 சிக்கல்கள் கிளம்பி உள்ள நிலையில், புகார்களில் தந்துள்ள தகவல்கள் எல்லாம் உண்மைதானா என்பதை கண்டறிய வருமான வரித்துறை, வங்கிகள் உள்ளிட்ட அலுவலகங்களில் ஆவணங்களை காவல்துறையினர் பெற்று வருகின்றனர். அதன் பிறகுதான், எடப்பாடி பழனிசாமியை அழைத்து விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு வருகின்ற 6ம் தேதி விசாரணைக்கு வருகிறது. "சட்டம் தன் கடமையை செய்யட்டும்" என்று சொல்லாமல், கோர்ட்டுக்கு ஓடிச்சென்று எடப்பாடி பழனிசாமி ஏன் தள்ளுபடி கேட்கிறார்? என்றும் கேள்விகள் கிளம்பியுள்ளன.. மற்றொருபுறம், "நான்தான் ஒருங்கிணைப்பாளர்" என்று இப்போதுவரை சொல்லிவரும் ஓபிஎஸ், இந்த விஷயத்தில் என்ன செய்ய போகிறார் என்றும் தெரியவில்லை..
ஆனால், இந்த விஷயம் இந்த அளவுக்கு விஸ்வரூபமெடுக்கும் என்று எடப்பாடியே எதிர்பார்க்கவில்லையாம். என்ன நடக்கும்?: சொந்த தொகுதி என்பதால், எந்த பிரச்னையும் வராது என்றே கணித்துள்ளார். ஆனால், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுமே, எடப்பாடி தரப்பு அதிர்ந்து போய் விட்டதாம். ஒருவேளை, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் அந்த தேர்தலில் வெற்றி பெற்றதும் செல்லாததாகி விடுமாம்.
இப்படிப்பட்ட வழக்கில் தான், எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ்ஸை சேர்த்துள்ளனர்.. எப்படியும், எடப்பாடியின் சொத்துகள் குறித்து ஓபிஎஸ்ஸிடம் விசாரிக்கவே செய்வார்கள் என்றும் சொல்கிறார்கள். அதனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே ஓபிஎஸ் சாட்சியம் சொல்லகூடும் என்கிறார்கள் ஒரு சாரார்.
ஆனால், மற்றொரு சாராரோ வேறுவிதமாக சொல்கிறார்கள். எடப்பாடிக்கு எதிரான வழக்கில், சாட்சி சொல்ல போலீஸ் வலியுறுத்தினால் அதனை ஏற்கக்கூடாது என்றும், ஒருவேளை சாட்சி சொல்ல ஒப்புக்கொண்டால் அவரது அரசியலுக்கு ஆரோக்கியமாக இருக்காது என்றும் ஓபிஎஸ்சிடம் சொல்லி வருகிறாராம் அவரது நலம் விரும்பிகள். அந்தவகையில், ஓபிஎஸ்ஸின் சாட்சியமானது, இந்த வழக்கில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!