வேடசந்தூரில் போலீசார் மீது தாக்குதல் : 3 பேருக்கு வலை
வேடசந்தூர் அருகே நடந்த கோவில் திருவிழாவில், பட்டாசை கொளுத்தி வீசி போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ளது வாய்க்கால்கரை. இங்குள்ள மதுரைவீரன் கோவில் திருவிழாவையொட்டி, சுவாமி ஊர்வலம் நேற்று இரவு நடந்தது. அப்போது அங்கு வேடசந்தூர் போலீஸ்காரர் பாலமுருகன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஆத்துமேடு டாஸ்மாக் கடை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த பாலமுருகன், அங்கிருந்தவர்களிடம் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்துமாறு கூறினார்.
இதில் இருசக்கர வாகனத்தை நிறுத்தியவர்கள் போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தமாட்டோம் என்று வாய்தகராறில் ஈடுபட்டனர். போலீஸ் காரர் பாலமுருகன் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால்தான் கூறுகிறேன் என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த 5 பேர் கொண்ட கும்பல், போலீஸ்காரர் என்று கூட பார்க்காமல் பாலமுருகன் மீது பட்டாசை கொளுத்தி வீசினர். இதில், அவரது செருப்பு மீது பட்டாசு பட்டு செருப்பு தீப்பிடித்து வெந்து அவரது காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் ஆத்திரம் அடங்காத அவர்கள் பாலமுருகனை அடித்து உதைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
மேலும் அவரை தரக்குறைவாகப் பேசி, பாலமுருகனின் செல்போனை பிடுங்கி ரோட்டில் போட்டு உடைத்தனர். வண்டியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று பாலமுருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காவலர் பாலமுருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேடசந்தூர் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.