மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்கு பயன்படும் திண்டுக்கல் எலிகள்...!

தடுப்பூசி பரிசோதனை, மருத்துவ படிப்பு ஆராய்ச்சி ஆகியவற்றுக்காக 'மைஸ்' இன எலிகள் பயன்படுத்தப்படுகின்றன

Update: 2023-07-30 10:00 GMT

மைஸ் எலி (பைல் படம்)

திண்டுக்கல்லில் இருந்து நாக்பூருக்கு ஆராய்ச்சிக்காக 'மைஸ்' எலிகள் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன.

திண்டுக்கல்லில் இருந்து வடமாநிலங்களுக்கு ரயில்களில் காய்கறிகள், பழங்கள், வாழை இலை போன்றவை அனுப்பி வைக்கப்படுகின்றன. அதேபோல் வடமாநிலங்களில் இருக்கும் கோழி பண்ணைகளுக்கு முட்டைகளும் ரயில்களில் செல்கின்றன. இவை அனைத்தும் பயணிகள் செல்லும் விரைவு ரயில்களில் சரக்கு பெட்டியில் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதில் கோழி முட்டைகள் மட்டும் குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டிகளில்  அனுப்பி வைக்கப்படுகிறது

இதற்கிடையே ரயிலில் பயணிக்கும் பொருட்களின் பட்டியலில் எலிகளும் இடம்பெற்று இருக்கின்றன. தடுப்பூசி பரிசோதனை, மருத்துவ படிப்பு ஆராய்ச்சி ஆகியவற்றுக்காக 'மைஸ்' இன எலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை எலிகள் திண்டுக்கல் அருகே உள்ள என்.பஞ்சம்பட்டியில் வளர்க்கப்படுகின்றன. இதற்கிடையே மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருக்கும் ஆராய்ச்சி மையத்துக்கு 25 'மைஸ்' எலிகள் அனுப்பும்படி ஆர்டர் கொடுக்கப்பட்டது.

நாக்பூர் செல்கிறது இதையடுத்து திண்டுக்கல் வழியாக சென்ற மும்பை ரயிலில் 25 'மைஸ்' எலிகள் ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த எலிகள் பிறந்து 3 மாதங்களே ஆனவை ஆகும். எனவே பிளாஸ்டிக் தட்டில் மரத்தூள்களை பரப்பி, எலிகளை தட்டுக்குள் வைத்து வலையால் மூடியிருந்தனர். மேலும் மும்பை ரயிலில் சரக்கு பெட்டியில் தனிஇடத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் எலிகள் கொண்டு செல்லப்பட்டன. இந்த எலிகள் நாக்பூர் சென்றடைய 2 நாட்கள் ஆகும். எனவே எலிகளுக்கு இரையாக மக்காச் சோளத்தை உள்ளே வைத்து இருந்தனர். 'மைஸ்' எலிகள் மக்காச்சோளத்தை தின்றபடி ரயிலில் பயணித்து சென்றன. 

இதுகுறித்து 'மைஸ்' எலிகளை வளர்த்து வரும் பிரபு கூறுகையில், நான் என்.பஞ்சம்பட்டியில் பண்ணை வைத்து 'மைஸ்' எலிகளை வளர்த்து வருகிறேன். பிறந்து 3 மாதமான எலிகளை மருத்துவ ஆராய்ச்சிக்கு வாங்குகின்றனர். இதில் குறிப்பாக புதிதாக கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசியின் திறனை பரிசோதனை செய்வதற்காக ஆராய்ச்சி மையங்களுக்கு இந்த வகை எலிகளை வாங்குகின்றனர். அதேபோல் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந்த எலிகளை வாங்குகின்றனர். அதன்படி, வெளிமாநிலங்களில் உள்ள ஆராய்ச்சி மையங்கள் இந்த வகை எலிகளை அனுப்புமாறு என்னிடம் ஆர்டர் கொடுக்கின்றனர். இதையொட்டி வெளிமாநிலங்களுக்கு ரயிலில் எலிகளை அனுப்பி வைக்கிறேன் என்றார் அவர்.


Tags:    

Similar News