மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பனிப்பொழிவு : மக்கள் அவதி..!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பகலில் சாரல் மழை பெய்கிறது. இரவில் பனிப்பொழிவு இருப்பதால், மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடரமுடியாமல் அவதியடைந்துள்ளனர்.

Update: 2023-12-22 10:17 GMT

திண்டுக்கல் மாவட்டம் ,கொடைக்கானலில் கடுமையான பனிப்பொழிவு. மலையை மறைத்து நிற்கும் மூடுபனி.

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பகல் நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. பின்னர் இரவில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது. இப்படி மாறி மாறி தட்பவெப்பநிலை நிலவுவதால் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்துள்ளதுடன் நோய்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக சூரிய ஒளியே இல்லாத அளவிற்கு நகர் முழுவதும் பனிமூட்டம் நிலவி வருகிறது. மலைச்சாலையில் எதிரில் நடந்து வருபவர்களுக்குக்கூட முன்னால் வருபவர்களை தெரியாத அளவில் பனி மூட்டமாக இருக்கிறது. இதனால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டபடி செல்கின்றனர்.  

கொடைக்கானலில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்ப்டடு உள்ளது. முக்கிய வீதிகளில் உள்ள கடைகளும் பகுதியளவு மட்டுமே திறந்துள்ளது. ஏரிச்சாலையில் வியாபாரிகள் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். நகரில் சராசரி வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக உள்ளது. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அன்றாடம் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதே போல, மதுரை,தேனி, சிவகங்கை மாவட்டங்களில் ,மாலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்கிறது. அத்துடன், அதிகாலை நேரங்களில் சாலைகளில் மேகமூட்டம் காணப்படுவதுடன், அதிக குளிர் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ,இருசக்கர வாகனத்தில் செல்வோர் வாகனத்தை ஓட்டமுடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 

இந்த பனிப்பொழிவை சமாளிக்க, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து குளிருக்கான ஜெர்க்கின் அணிந்து செல்கின்றனர். கிராமங்களில் தலையில் துணிகளை அணிந்து கொண்டு, கிராம மக்கள் பணிக்கு செல்வதை காண முடிகிறது. கடுமையான பனிப் பொழிவால்,  காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் போன்ற குளிர் நோய்களும் ஏற்பட்டு, அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்கு வருவோரையும் அதிகமாக காணமுடிகிறது.

Tags:    

Similar News