பழனியில் வைகாசி விசாக தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
அதிகாலையில் இருந்தே பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் காவடி எடுத்தும், பாட்டுப்பாடியும் மலைக்கோவிலுக்கு வந்தனர்
பழனி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் திருமண மேடையில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தரு ளினார். சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடை பெற்றது.அதனைத் தொடர்ந்து திருமணக் கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பழனியில், 7 -ஆம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, இன்று அதிகாலையில் இருந்தே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் காவடி எடுத்தும், பாட்டுப்பாடியும் மலைக்கோவிலுக்கு வந்தனர்.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்தே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் காவடி எடுத்தும், பாட்டுப் பாடியும் மலைக்கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் பழனியில் இன்று கூட்டம் அலைமோதியது. இன்று இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப் பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றன.பாதுகாப்பு ஏற்பாடுகளை, பழனி காவல் துறையினர் செய்திருந்தனர்.