கொடைக்கானலுக்குள் நுழைந்தால் கொரோனா டெஸ்ட்; சுற்றுலா பயணிகளுக்கு கிடுக்கிப்பிடி

கொடைக்கானலுக்குள் நுழையும் சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-03 02:55 GMT

கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் சுற்றுலாப்பயணிகள்.

கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கொடைக்கானலுக்கு கடந்த மாதம் 5-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் வருகை தர அனுமதிக்கப்பட்டுள்ளது. பல சுற்றுலா இடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக கேரள மாநில சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொடைக்கானலுக்கு வருகை தரும் கேரள மாநில சுற்றுலா பயணிகளால் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே, கொடைக்கானலுக்கு வருகை தரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் போலீசார் மருத்துவக்குழுவினர் உதவியுடன் நேற்று அதிகாலை முதலே வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், நகருக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் 2 தடுப்பூசி போட்ட நபர்கள் மட்டும் எந்த விதமான பரிசோதனையும் இன்றி நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், கொடைக்கானலுக்கு வருகை தரும் அனைவருக்கும் மருத்துவ குழு உதவியுடன் கொரோனா பரிசோதனை செய்யப்படும். 2 தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழுடன் வருபவர்கள் எந்தவிதமான பரிசோதனையும் இன்றி நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றார்.

Tags:    

Similar News