கொடைக்கானல் வனச்சுற்றுலா தலங்களுக்கான கட்டண உயர்வு வாபஸ்: வனத்துறை அறிவிப்பு

கொடைக்கானல் வனச்சுற்றுலா தலங்களுக்கான கட்டண உயர்வை திரும்பப்பெறுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

Update: 2022-01-07 16:21 GMT

கொடைக்கானல் துாண்பாறை.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனச்சுற்றுலா தலங்களுக்கான கட்டண உயர்வை வனத்துறை திரும்பப் பெற்றது.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் மோயர் சதுக்கம், குணா குகை, துாண்பாறை, பைன் மரக்காடுகள் ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன.

இவற்றில் முதல் இரு தலங்களுக்கும் தலா ரூ.10, துாண் பாறைக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயித்து வசூலித்தனர். பைன் பாரஸ்டுக்கு கட்டணமில்லை. எனவே பயணிகள் ரூ.25 செலவிட்டனர்.

சமீபத்தில் மூன்று பகுதிகளுக்கும் ஒருங்கிணைந்த புதிய கட்டணமாக ரூ.50, கார் பார்க்கிங் ரூ.50 என வனத்துறை கட்டணத்தை உயர்த்தி சில நாட்களாக வசூலித்து வந்தது.

இதற்கு பயணிகள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நேற்று முன்தினம் மோயர் சதுக்கத்தில் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமாரை முற்றுகையிட்டு வாகன ஓட்டுனர்கள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து நேற்று பழைய கட்டண முறையை அமல்படுத்த உள்ளதாக வனத்துறை தெரிவித்தது.

இது குறித்து ரேஞ்சர் விஜயன் கூறுகையில், தற்போதைய பிரச்னையை தவிர்க்க பழைய கட்டணம் ரூ.25 வசூலிக்கபடுகிறது. கார் பார்க்கிங்கிற்கு கட்டணம் இல்லை. இச்சுற்றுலா தலங்களில் கட்டமைப்புகளை மேம்படுத்திய பின் கட்டண உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

Tags:    

Similar News