கொடைக்கானல் அருகே மக்கள் தொடர்பு முகாம்: கலெக்டர் துவக்கம்
பெருமாள்மலையில் நடைபெற்ற முகாமில 93 பயனாளிகளுக்கு ரூ.43.05 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.;
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், அடுக்கம் ஊராட்சி, பெருமாள்மலையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 93 பயனாளிகளுக்கு ரூ.43.05 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அடுக்கம் கிராமம், பெருமாள்மலையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 93 பயனாளிகளுக்கு ரூ.43.05 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை, மாவட்ட ஆட்சித்தலைவர், பார்வையிட்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.
முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சிரமமின்றி தீர்வு காண வேண்டும் என்பதற்காக இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.
வேளாண் தொழிலை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சூரியஒளி சக்தி மின் மோட்டார், ஆழ்துளை கிணறு அமைக்க கடனுதவிகள், வேளாண் உபகரணங்கள் போன்றவை வழங்கப்படுகின்றன. அவற்றை விவசாயிகள் அறிந்து முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பருவ மழை காலங்களில் பரவும் நோய்களில் டெங்கு காய்ச்சலும் ஒன்றாகும். டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை மூலம் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டால், பொதுமக்கள் தாங்களாகவே சுயமாக மருந்துகள் உட்கொண்டு சிகிச்சை எடுக்காமல், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் நன்னீரில்தான் உருவாகின்றன. எனவே ,குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காத வகையில் தூய்மையாக வைக்க வேண்டும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தமிழ்நாடு முதலமைச்சர், 15.09.2023 அன்று தொடக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இரண்டாம் கட்டமாக வரும் 10-ஆம் தேதி பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தடுத்து நெகிழி இல்லா பசுமை கொடைக்கானலை உருவாக்கிட, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மலைப் பகுதியில் அனைத்து வகையான நெகிழி பைகள், 1 லிட்டர், 2 லிட்டர் தண்ணீர் நெகிழி பாட்டில்கள், அனைத்து வகையான நெகிழ் குளிர்பான பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்கள், அனைத்து கடைகள், வியாபார நிறுவனங்கள், பொது இடங்களில் விழிப்புணர்வு பலகைகள் அமைக்கவும், மலைப்பகுதிக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும், விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி, பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கும், மண் மற்றும் நீரில் மாசு ஏற்படுத்தும் நெகிழி பைகளை முற்றிலும் தவிர்த்திடும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மண்வளம் காத்திட எதிர்கால சந்ததியினரின் நலன் பேணிட பொதுமக்கள் நெகிழி பைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்திட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் வீட்டில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதன் மூலம் சுற்றுச்சூழலையும், மண் வளத்தையும் பாதுகாக்க முடியும்.பணிக்கு செல்லும் மகளிர்களின் பொருளாதார செலவினை குறைத்து, சேமிப்பினை மேம்படுத்திடும் வகையில் மகளிர்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதியும் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல், 3 பயனாளிகளுக்கு முழுப்புலம் பட்டா மாறுதல், 5 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா நகல், சமூக பாதுகாப்புத் திட்டத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ.77,000 மதிப்பிலான கல்வி உதவித்தொகை, 5 பயனாளிகளுக்கு ரூ.44,000 மதிப்பிலான திருமண உதவித்தொகை, 7 பயனாளிகளுக்க ரூ.1,57,500 மதிப்பிலான இறப்பு உதவித்தொகை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சாலைபில் 12 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை நகல், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வீடு வழங்கும் திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.24.77 இலட்சம் மதிப்பிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.14.89 இலட்சம் மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.60,000 மதிப்பில் 2 நகரும் காய்கறி வண்டிகள், 2 பயனாளிகளுக்கு ரூ.400 மதிப்பில் பழச்செடிகள் தொகுப்பு என, மொத்தம் 93 பயனாளிகளுக்கு ரூ.43.05 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து, எளிதில் பெறுவதற்கு வசதியாக இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசின் திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சித்தலைவர் பேசினார்.
இம்முகாமில், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுவேதா ராணி கணேசன், பழனி வருவாய் கோட்டாட்சியர் இரா.இராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் ச.சிவக்குமார், கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் காயத்ரி, மாவட்ட சமூக நல அலுவலர் கோ.புஷ்பகலா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத்திட்டம்) கங்காதேவி, மாவட்ட சுற்றுலா அலுவலர்(பொ) சுதா, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் கே.கார்த்திகேயன், அடுக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பி.கண்ணன், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மாவட்ட செயல் அலவலர் பி.சுதாதேவி, கொடைக்கானல் வட்டாட்சியர் கார்த்திகேயன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.