பழனி-பாலசமுத்திரம் சாலை அடைப்பு; பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
பழனி-பாலசமுத்திரம் சாலை அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி புறவழிச்சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பழனி-பாலசமுத்திரம் சாலையில் ராமநாதன்நகர் மற்றும் புறவழிச்சாலை ஆகியவை சந்திக்கும் நான்கு ரோடு சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு சாலையை அடைத்து புறவழிச்சாலையில் சுற்றிச் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சாலையை அடைக்க ராமநாதன் நகர் மற்றும் பாலசமுத்திரம் பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், பழனி-பாலசமுத்திரம் சாலை முக்கியமான சாலை ஆகும். இப்பகுதியில் விவசாயம் தொடர்பான பணிகளுக்கு பயன்படும் வாகனங்கள் முதல் அனைத்து வகை வாகனங்களும் சென்று வருகிறது.
தற்போது பழனியில் இருந்து பாலசமுத்திரத்திற்கு நேராக செல்லும் சாலையை அடைத்து புறவழிச் சாலையில் சுற்றி செல்லும் வகையில் சாலை அமைப்பது மிகவும் தவறானது. அதிக வாகனங்கள் வரும் சாலையை அடைக்காமல் வழக்கம் போலவே சாலையை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
திடீர் சாலை மறியல் குறித்து தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல்துறையினர் சாலை முதலீட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் தற்காலிகமாக பணியை நிறுத்தி வைப்பதாகவும் அதிகாரிகளுடன் கலந்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.