மோசமான சாலை: கொடைக்கானல் மோட்டார் சைக்கிளில் சென்ற தலைமை காவலர் பலி
சாலையை சீரமைக்காத கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் மோட்டார் சைக்கிளில் சென்ற தலைமை காவலர் பலி;
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மாவுத்தன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 36). இவர் கொடைக்கானலில் போக்குவரத்து போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு பிரீத்தா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்ததால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்சர்வேட்டரி பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் பாலசுப்பிரமணியன் ஈடுபட்டார். பின்னர் அவர் போலீஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பழைய அப்பர் லேக் ரோடு பகுதியில் அவர் வந்தபோது, திடீரென்று சாலையில் இருந்த பெரிய பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலசுப்பிரமணியன் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் சேதமடைந்த சாலையால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்சர்வேட்டரி பழைய அப்பர் லேக் ரோட்டில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த வாரம் மோகன் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, இந்த பள்ளத்தால் விபத்தில் சிக்கி பலியானார். அதன் தொடர்ச்சியாக தற்போது அதே சாலையில் சென்ற முதன்மை காவலர் உயிரும் பறிபோய் உள்ளது.
தனது சக காவலர் சாலை விபத்தில் உயிரிழந்த சோகம் தாங்காமல் மேலும் எவரும் விபத்தில் இறந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் சக போலீசார் விபத்தை ஏற்படுத்தக்கூடிய பள்ளங்களை மண் கொண்டு சரி செய்தது பார்ப்போரின் கண்களை கலங்கச் செய்தது.
இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் குண்டும், குழியுமான சாலையை நேற்று சீரமைத்தனர். ஒரேவாரத்தில் சேதமடைந்த சாலையால் 2 பேர் பலியான சம்பவம் கொடைக்கானலில் சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்தில் இறந்த பாலசுப்பிரமணியன் உடல் அவரது சொந்த ஊரான மாவுத்தன்பட்டிக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அங்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன், ஏஎஸ்பி லாவண்யா ஆகியோர் அவரது உடலுக்கு சுமந்து சென்று , மலர்வலையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும் காவல்துறை அதிகாரிகள் பலர் மரியாதை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தின்போது, தலைமை காவலர் பாலசுப்பிரமணியனின் உடலை எஸ்பி சீனிவாசன், ஏ எஸ்பி லாவண்யா ஆகியோர் தங்களது தோள்களில் சுமந்து மயானம் வரை கொண்டு சென்றனர்.
அங்கு அவரது உடலுக்கு துப்பாக்கியால் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. விபத்தில் உயிரிழந்த முதன்மை காவலரின் உடலை காவல் கண்காணிப்பாளர் சுமந்து சென்று இறுதி அடக்கம் செய்தது பார்ப்பவரின் கண்களை கண்ணீர் வரவழைத்தது.
தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் பணியில் இருந்த வரை அவருடன் பணியாற்றிய உயர் அதிகாரிகள் மற்றும் சக அதிகாரிகளுடன் நட்பு ரீதியாக நெருங்கி பழகும் பழக்கம் உடையவர் என்பதாலும் பொதுமக்களின் நலனில் மிகவும் அக்கறை எடுத்து பணிபுரிபவர் என்பதாலும் அவருக்கு இந்த மரியாதை கிடைத்தது என கண்ணீர் மல்க ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.
கண் கெட்டதும் சூர்ய நமஸ்காரம் என்ற பழமொழிக்கேற்ப கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த சாலையை இன்று அவசர அவசரமாக சரி செய்தனர்.