பழனி அருகே சிறுநாயக்கன் குளத்தில் தண்ணீருடன் நுரை வருவதால் விவசாயிகள் கவலை
பழனியில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது
திண்டுக்கல் மாவட்டம், பழனியருகே சிறுநாயக்கன் குளத்தில் தண்ணீருடன் சேர்ந்து அதிகளவில் நுரை உற்பத்தியாகி வருவது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக பழனியில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. பழனி சண்முகநதி, வையாபுரி கண்மாய், சிறுநாயக்கன்குளம் ஆகாயவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில் பழனி-தாராபுரம் சாலையில் உள்ள சிறுநாயக்கன்குளத்தில் தண்ணீருடன் சேர்த்து நுரையும் வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுநாயக்கன் குளத்தில் இருந்து பாப்பா குளத்திற்கு மறுகால் பாயும் இடத்தில் நுரைகள் தேங்கி பல அடி உயரத்திற்கு நிற்கிறது.
இத்தனை ஆண்டுகளில் தண்ணீர் வரும்போதுஎல்லாம் இதுபோன்ற இல்லாமல் தற்போது இதுபோன்று நுரை வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நுரையுடன் வரும் நீரை கால்நடைகள் அருந்துவதும், விவசாயத்திற்கு பயன்படுத்தவதும் வேறு ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்துமோ என்கிற அச்சம் விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் ஏற்பட்டுள்ளது.எனவே தண்ணீரில் ஏற்படும் துரைக்கு காரணம் என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வுசெய்து ஆரம்பகட்டத்திலேயே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.