கொடைக்கானலில் அடிக்கடி பறக்கும் ஆளில்லா விமானம்: நடவடிக்கை பாயுமா?
தூர்தர்சன் டிவி டவர், வானிலை ஆராய்ச்சி நிலையம், நட்சத்திர ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆளில்லா விமானம் அடிக்கடி பறந்து வருகிறது.
தமிழகத்தில் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு மத்திய மாநில அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதி பாதுகாக்கபட்ட வனப்பகுதியாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல், தூர்தர்சன் டிவி டவர், வானிலை ஆராய்ச்சி நிலையம், நட்சத்திர ஏரி மற்றும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆளில்லா விமானம் (ட்ரோன் கேமரா) அடிக்கடி பறந்து வருகிறது.
மேலும் மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகள், அரிய வகை வன விலங்கினங்கள் உள்ள வன பகுதிகளில் அடிக்கடி ஆளில்லா விமானம் பறப்பது தொடர்ந்து வாடிக்கையாக உள்ளது. கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாகும்.எனவே, இங்கு நிலவி வரும் குளுமையையும், பசுமை நிறைந்த இயற்கை அழகினையும் கண்டு ரசிக்க இந்திய அளவிலான அரசியல் பிரமுகர்கள்,தொழில் அதிபர்கள், உயர் அரசு அதிகாரிகள் என கொடைக்கானலுக்கு வந்து தங்கி செல்வதும், ஏரிசாலையை சுற்றி நடைபயணம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருவதும் வாடிக்கையாக உள்ளது.
கொடைக்கானல் மலை பகுதிகளை வட்டமிடும் ஆளில்லா விமானத்தின் மூலம் கொடைக்கானல் வேவு பார்க்கப்படுகிறதா அல்லது முக்கிய பிரமுகர்களை கண்காணிக்க ஆளில்லா விமானம் பறக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.