ஒட்டன்சத்திரம் அருகே குடிசை வீட்டில் விவசாயி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு
ஒட்டன்சத்திரம் அருகே குடிசை வீட்டில் விவசாயி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காவேரி யம்மாபட்டி கிராமத்தில் கொம்மனை தோட்டம் பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்லமுத்து (52). அவருடைய தம்பி முருகேசன் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர்.
இருவருக்கும் திருமணம் ஆகாத நிலையில் செல்லமுத்து தோட்டத்திலேயே சாலை அமைத்து இருவரும் குடியிருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இரவு முருகேசன் வெளியூர் சென்றுவிட்ட நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் குடிசை வீடு முற்றிலும் தீப்பற்றி எரிந்ததை அக்கம்பக்க தோட்டத்தினர் பார்த்து அவரது தம்பி முருகேசனுக்கும் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்து பார்த்த அவரது தம்பி மற்றும் உறவினர்கள் குடிசை முற்றிலும் எரிந்து கரிக்கட்டையான நிலையில் இருந்த செல்லமுத்துவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பின் ஒட்டன்சத்திரம் காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். செல்லமுத்து முற்றிலுமாக எரிந்த நிலையில் இருந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செல்லமுத்து தானாகவே தீ வைத்துக் கொண்டாரா? அல்லது வேறு மர்மநபர்கள் எவரேனும் குடிசை வீட்டில் தீ வைத்து விட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
மேலும் எரிந்த நிலையில் இருந்த செல்லமுத்து உடலை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.