சாலையோர குப்பைகளில் தீ வைப்பதால் ஏற்படும் புகை மண்டலத்தால் மக்கள் அவதி
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது திமுக வேட்பாளர் சக்கரபாணி குப்பைகளை கொட்ட தனி இடம் தேர்வு செய்யப்படுமென வாக்குறுதி யளித்தார்;
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் குப்பைகளே எரியூட்டப்பட்டதால் எழுநத புகை மூட்டம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்ட இடமில்லாமல் சாலை ஓரங்களில் கொட்டி தீ வைப்பதால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி வரும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது கூட தற்போது உணவு மற்றும் உணவுத்துறை அமைச்சராக உள்ள சக்கரபாணி, நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கென தனி இடம் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான நிலையில் இதுவரை குப்பை கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்படவில்லை. இதனிடையே இன்று ஒட்டன்சத்திரம் பழனி தேசிய நெடுஞ்சாலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே குப்பைகளை கொட்டி தீ வைத்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
மேலும் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனம் தெரியாமல் விபத்திற்குள்ளாகி வருவதால் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தற்போது பழனி தைப்பூச விழா அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்ற நிலையில் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் பாதயாத்திரை பக்தர்கள் செல்ல முடியாமலும், மூச்சுத் திணரல் ஏற்பட்டும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை கொட்டுவதற்கு தனி இடம் தேர்வு செய்து ஒட்டன்சத்திரத்தை மாசில்லா நகராட்சியாக மாற்ற வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.