நீண்ட நாட்களுக்குப் பிறகு களைகட்டிய ஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தை

நெடுநாள்களுக்கு பின்னர் கூடிய ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் மாடுகளின் விற்பனை களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி

Update: 2022-01-24 04:00 GMT

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் திங்கள்கிழமை கூடிய மாட்டுச்சந்தை

நீண்ட நாட்களுக்குப் பிறகு களைகட்டிய ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற மாட்டுச் சந்தையில் சுமார் 5 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள்  மகிழ்ச்சி தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையானது தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தையாகும். இந்த சந்தைக்கு வாரம்தோறும் திங்கள்கிழமை கரூர், காங்கயம், தேனி, பழனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

இங்கு விற்பனைக்கு வரும் மாடுகளை வாங்க அதிகளவில் கேரளா மற்றும் ஆந்திரா வியாபாரிகளும், உள்ளூர் விவசாயிகளும் வருவது வழக்கம்.இந்நிலையில் கடந்த வாரங்களில் மாடுகளுக்கு ஏற்பட்ட கோமாரி நோய் காரணமாக மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரவில்லை. அதே போல் மாடுகளை வாங்கவும் வியாபாரிகளோ, விவசாயிகளோ ஆர்வம் காட்டாததால் கடந்த மூன்று வாரங்களாக மாட்டுச் சந்தை வெறிச்சோடியே காரணப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மாட்டுச் சந்தைக்கு சுமார் ஏழாயிற்றுக்கும் மேற்பட்ட காங்கேயம் காளை, நாட்டு மாடு, சிந்து மாடு, எருது, ஜல்லிக்கட்டு காளை என அனைத்து வகையான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதால் நீண்ட நாட்களுக்குப் பிறகு மாட்டுச்சந்தை களைகட்டியதால் சுமார் 5 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் மாடுகளை வாங்கவும், விற்பனை செய்யவும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், வியாபாரிகளும் முகக்கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த மாட்டுச்சந்தையில் கொரோனா பாதிப்பு அச்சமில்லாமல் இருப்பதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News