திண்டுக்கல்: புகை மண்டலத்தால் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அவதி

திண்டுக்கல் நகரில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

Update: 2022-01-17 07:52 GMT

திண்டுக்கல்லில் ஏற்பட்ட புகை மூட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியானது கடந்த 2010 ஆம் ஆண்டு பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 18 வார்டுகளுடன் செயல்பட்டு வருகிறது.

18 வார்டுகள் மற்றும் காய்கறி சந்தைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட தனி இடம் இல்லாததால் திண்டுக்கல் பழனி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பைகளைக் கொட்டி தினமும் தீ வைத்து வருகின்றனர்.

இதனால் ஏற்படும் புகை மண்டலத்தால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நேற்று முதல் பழனி முருகன் கோவில் தைப்பூச விழாவிற்கு செல்லும் பாதயாத்திரை பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

வழக்கம் போல்  நகராட்சி நிர்வாகம் பழனி சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

மேலும் அப்பகுதி வழியாக கைக்குழந்தைகளுடன் செல்லும் பாதயாத்திரை பக்தர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கைப் பொத்திக்கொண்டு செல்கின்றனர்.

இந்த புகை மண்டலத்தால் தொற்று நோய் பரவுவதோடு விபத்துக்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக பாதயாத்திரை பக்தர்களும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மீது அக்கறை இல்லாமல் தொடர்ந்து சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து தீங்கு விளைவிக்கும் நகராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags:    

Similar News