துப்பாக்கி, சைரனுடன் அதிரவைத்த பொலிரோ ஜீப் ; போலி போலீஸ் கமிஷனர் மடக்கி பிடிப்பு
வத்தலகுண்டு அருகே போலீஸ் வாகனம் போல் வந்த பொலிரோ ஜீப், போலி துப்பாக்கியுடன் போலி போலீஸ் கமிஷனரை கைது செய்துள்ளனர்.
சென்னை, குளத்தூரில் உள்ள ஜீவா நகரைச் சேர்ந்த சின்னையன் மகன் விஜயன் (40). இவர், இன்று அதிகாலை தேனியில் இருந்து வத்தலக்குண்டு வழியாக போலீஸ் என எழுதப்பட்டு சைரன் வைத்த TN 37 G 0515 என்ற பொலிரோ ஜீப்பில் சென்னை நோக்கி சென்றார்.
அப்போது, வத்தலகுண்டு அடுத்த திண்டுக்கல் ரோடு லட்சுமிபுரம் டோல்கேட் அருகே பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சைரனுடன் அதிரவைத்த பொலிரோ ஜீப்பை சந்தேகத்துடன் நிறுத்தி சோதனை போலீசார் செய்தனர். அவரிடம் யார் என்று கேட்டபோது, தான் போலீசார் என்றும் கூறியுள்ளார். அதற்கான அடையாள அட்டையை காட்டியுள்ளார்.
சந்தேகம் அடைந்த போலீசார் மீண்டும் விசாரணை செய்தபோது, தான் சென்னை கமிஷனர் என்று கூறியுள்ளார். அதற்கான அடையாள அட்டையையும் காட்டியுள்ளார். இதனை சோதனையிட்டதில் சந்தகம் அடைந்த பட்டிவீரன்பட்டி போலீசார், உயர் அதிகாரிகள் உத்திரவின்பேரில், அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி சந்திரன் மற்றும் போலீசார், போலி போலீஸ் கமிஷனர் விஜயனிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். போலி போலீஸ் கமிஷனரை போலீசார் கைது செய்து, அவரின் காரையும் பறிமுதல் செய்துள்ளது இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே லட்சுமிபுரம் டோல்கேட் அருகே வாழை தோட்டத்திற்குள் ஒரு துப்பாக்கியும், போலீஸ் ஐ.டி, கார்டுகளும் கிடப்பதாக அப்பகுதி வியாபாரிகள் அளித்த தகவலின்படி அதனை கைப்பற்றிய போலீசார் அடையாள அட்டை போலி போலீஸ் என்பதை அடையாளப்படுத்திய தகவல்களை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.