இ-பதிவு இருந்தா வாங்க: இல்லைன்னா போங்க - திண்டுக்கல்லில் போலீசார் கெடுபிடி
திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பகுதியான பள்ளப்பட்டி சோதனைச்சாவடியில் வாகன சோதனையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.;
திண்டுக்கல் மாவட்ட எல்லைப்பகுதியான பள்ளப்பட்டி சோதனைச்சாவடியில் வாகன சோதனையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் இ-பதிவு இருந்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர். மற்ற வாகனங்களை திருப்பியனுப்பி வருகின்றனர்.
தமிழக அரசு உத்தரவுப்படி இன்று முதல் அந்தந்த மாவட்டத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்வோர் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ- பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பகுதியான பள்ளப்பட்டி சோதனைச்சாவடியில் அம்மையநாயக்கனூர் காவல்துறை ஆய்வாளர் சண்முகலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் தமிழகரசு வழிகாட்டுதல்படி மாவட்டத்திற்கு உள்ளே வரும் வாகனங்களின் இ- பதிவு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இ-பதிவு முறையில் ஒரு சில குளறுபடிகள் உள்ளதால் உரிய ஆதாரத்துடன் வருவோருக்கு மட்டும் அவர்களின் முழு விவரங்களை பதிவு செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, வெப்ப பரிசோதனை செய்த பின்பு அனுமதிக்கின்றனர். இந்த மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில் நிலக்கோட்டை துணைக்கண்காணிப்பாளர் முருகன் தலைமையிலான காவல்த்துறையினர் 3 -சிப்ட்டுகளாக பிரிக்கப்பட்டு 3 - ஆய்வாளர் தலைமையிலான தலா 15 -காவலர்கள் வீதம் அடங்கிய குழுவினர் மூன்று சுற்றுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.