நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் அதிமுக வெற்றி : அதிர்ச்சியில் திமுக

நிலக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அதிமுக வென்றது

Update: 2022-01-22 04:00 GMT

நிலக்கோட்டை ஒன்றியக்குழு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றதை தடுக்கும் திமுகவினர் மீது நடவடக்கை கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த அதிமுகவினர்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்காக திமுகவினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அதிமுக தலைவர் வெற்றி  பெற்றதால் திமுகவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில்  20 உறுப்பினர்களைக் கொண்ட நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுவின்  தலைவராக அதிமுகவை சேர்ந்த ரெஜினாநாயகம் என்பவரும், துணைத் தலைவராக யாகப்பன் என்பவரும் பதவி வகித்து வந்தனர்.

இந்நிலையில், திமுகவினர் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான  வாக்கெடுப்பு வட்டாட்சியர் காசி செல்வி தலைமையில் நடைபெற்றது.  ஐந்தில் நான்கு  பங்கு உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க வேண்டும். இதனடிப்படையில் குறைவான உறுப்பினர்களே தலைவர் பதவிக்கு வாக்குப் பதிவு செய்ததால்,  அதிமுக தலைவர் ரெஜினாநாயகம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து துணைத் தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு பெட்டியைத் திறக்க முற்பட்ட போது  துணைத் தலைவர் பதவிக்கும்  அதிமுகவினரே வெற்றி பெற்று விடுவார்கள் என்ற  அச்சத்தில்  திமுகவினர் தகராறில் ஈடுபட்டதாகவும் இதன் காரணமாக  வட்டாட்சியர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவிட்டாதவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நடத்தி தலைவர் துணைத்தலைவர் காண சான்றிதழ்களை வழங்கக்கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் கோரிக்கை மனுவை நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் மற்றும்  ஒன்றியக்குழுத்தலைவர் ரெஜினா நாயகம், துணைத்தலைவர் யாகப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்துத் தருவதாக மாவட்ட ஆட்சியர் கூறியதைத் தொடர்ந்து அங்கிருந்து அதிமுகவினர் கலைந்து சென்றனர். திமுகவினரின் இந்த ஜனநாயக விரோதச்செயலை கண்டிப்பதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.


Tags:    

Similar News