போக்சோ சட்டத்தில் ஒருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: மகிளா நீதி மன்றம் தீர்ப்பு
குற்றவாளிக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை ரூ.7,500 அபராதம் விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை, ரூ.7,500 - திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திண்டுக்கல், சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் சீண்டல் செய்த அசோக்குமார் என்பவரை சாணார்பட்டி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் சாணார்பட்டி காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண், அசோக்குமாருக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 7500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
போக்சோ சட்டம்: பாலியல் தொந்தரவு, பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் சிறார் தொடர்பான புகாரை பாதிக்கப்பட்ட அந்த நபரோ அவரது பெற்றோரோ, மருத்துவரோ, உறவினரோ, நண்பரோ, அவர் படிக்கும் பள்ளியோ, அதன் ஊழியர்களோ தெரிவிக்கலாம்.
போக்சோ சட்டத்தின்கீழ் புகார் தரும் நபர் அவருக்கு பாதிப்பு நேர்ந்த உடனேதான் புகார் அளிக்க வேண்டும் என்பது எல்லாம் கிடையாது. அவர் எந்த வயதிலும் தனக்கு 18 வயதுக்கு கீழ் நேர்ந்த பாலியல் தொந்தரவு அல்லது பாலியல் வல்லுறவு குறித்து புகார் தெரிவிக்கலாம்.
பெரும்பாலும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் அந்த சிறாரின் குடும்ப உறுப்பினராகவோ அவரது உறவினராகவோ அல்லது குடும்பத்துக்கு நெருக்கமானவராகவோ இருக்கலாம். சிறு வயதில் நிகழ்ந்த கொடுமை, அந்த சிறுவரின் வாழ்வில் பின்னாளிலும் கூட மனவுளைச்சலை ஏற்படுத்தக்கூடும்," என்று ஆய்வுகள் கூறுவதாக இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்தகைய பாதிப்பில் இருந்து வெளிவரவே இந்த புகார் வசதியை அரசு உருவாக்கியிருக்கிறது.
இந்த புகாரை நேரடியாக காவல் நிலையத்திலோ, போக்சோ இ-பாக்ஸ் என்ற இணையபக்கம் மூலமாகவோ தெரிவிக்கலாம்.கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜனவரி 31 வரை இந்த இ-பாக்ஸ் புகார் பெட்டி மூலம் 354 புகார்களை தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பெற்றிருக்கிறது. இந்த இணையப் பக்கத்தில் பதிவு செய்யப்படும் புகார்களை இந்த தேசிய ஆணையமும் புகார் பதிவாகும் மாநிலத்தின் சிறார் பாதுகாப்பு ஆணையமும் இணைந்து கண்காணிக்க போக்சோ சட்டத்தின் 44(1) பிரிவு வகை செய்கிறது.