தர்மபுரியில் கருணைக்கிழங்கு விலை அதிகரிப்பு

தர்மபுரியில் வரத்து குறைவு கருணைக்கிழங்கு விலை ஒரே நாளில் ரூ. 9 அதிகரித்துள்ளது

Update: 2023-07-11 09:08 GMT

சித்த மருத்துவத்தில் தேரையர் நோய் அணுகாவிதி என்ற நூலில் மண்பரவு கிழங்குகளில் கருணையன்றி புசியோம்என்று சொல்லப்பட்டிருப்பதன் மூலம் கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு மட்டுமே சிறந்தது என வலியுறுத்தப்படுகிறது. ஊட்டச்சத்து அளிக்கும் கிழங்கு வகைகளில் முக்கிய இடத்தை பிடிப்பது கருணைக்கிழங்கு. ஈரப்பதமான பகுதிகள் மற்றும் மிதமான வெயில் நிலவும் பகுதிகளில் கருணைக்கிழங்கு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கருணைக்கிழங்கை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள், இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன. பசியின்மை, வயிறு தொடர்பான கோளாறுகள், செரிமான பிரச்சினை இருப்பவர்கள் கருணைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கருணைக்கிழங்கு வரத்து அதிகமாக இருந்ததால் அதன் விலை கணிசமாக குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்பனையானது. நேற்று சந்தைக்கு கருணைக்கிழங்கு வரத்து வழக்கத்தை விட குறைந்தது. இந்த நிலையில் தேவை அதிகரித்ததால் நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.9 விலை உயர்ந்தது.

ஒரு கிலோ ரூ.44- க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் 1 கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. கருணைக் கிழங்குக்கு அதிக விலை கிடைத்ததால் அதை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

Tags:    

Similar News