சென்னையில் ஏப்.15 முதல் மகளிர் சுய உதவிக்குழுக்கள் விற்பனை கண்காட்சி
சென்னையில் ஏப்.15 முதல் ‘மகளிர் மேளா 2022’ மகளிர் சுய உதவிக்குழுக்கள் விற்பனை கண்காட்சி நடைபெறுகிறது.;
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தருமபுரி - மாநில அளவில் சென்னையில் நடைபெறும் 2022-ஆம் ஆண்டிற்கான கோடை விடுமுறையை (கோடை கொண்டாட்டம்) முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் விற்பனை கண்காட்சி நடைபெறுதல்
மகளிர் மேளா 2022-ம் ஆண்டிற்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநரால் தெரசா மகளிய வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் விற்பனை கண்காட்சி நடைபெறுகிறது.
ஏப்ரல் 15 முதல் மாநில அளவில் 30 நாட்கள் நடைபெறும் கோடை கொண்டாட்டம் கண்காட்சியில் அனைத்து மாவட்டங்கள் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களின் உற்பத்தி பொருட்களுடன் கலந்து கொண்டு பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக அரங்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பாக தங்கும் வசதி கண்காட்சி அரங்கிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, தருமபுரி மாவட்டம் சார்பாக சென்னையில் நடைபெறும் கோடை கொண்டாட்டம் கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் சிறப்பு குழுக்களான மாற்றுத்திறனாளிகள் தங்கள் உற்பத்தி பொருட்களின் மாதிரியுடன் (Sample) 25.03.2022 தேதி அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.