ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் எருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணைக்கு இன்று நீர்வரத்து 4479 கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 100.72 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து இன்று 3603 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதேபோன்று கபினி அணைக்கும் நீர்வரத்து வரதொடங்கியதால், இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1008 கனஅடியாக அதிகரித்தது. 2284 அடி உயரம் கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2276.35 அடியாக காணப்பட்டது. அணையில் இருந்து இன்று 2000 கன அடி அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 5603 கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளான கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் இன்று 5603 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடாக மாநில எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். கர்நாடகா அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக குறைவான அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த 2 தினங்களாக 1500 கனஅடியாக நீடித்து வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 2000 கனஅடியாக உயர்ந்தது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது. கர்நாடகா அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை காலை தமிழகத்திற்கு வந்தடையும். அப்போது ஒகேனக்கல்லின் நீர்வரத்து மேலும் அதிரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.