ஒகேனக்கல்லில் இன்று முதல் பரிசல் இயக்க அனுமதி
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நின்றதால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.;
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தொடர் மழை காரணமாக நீர்வரத்து கபினி அணைக்கு 25 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 26-ம் தேதி மாலை இருமாநில எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்தடைந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. படிப்படியாக உயர்ந்த நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்ததால் அங்குள்ள மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் ஆகிய அருவிகளில் செம்மண் நிறத்தில் புதுவெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.
கடந்த 26-ம் தேதி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்வதாலும், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நின்றதால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதன்காரணமாக இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.