ஏரியில் இருந்து கிராவல் மண் எடுத்த டிப்பர் லாரிகளை சிறைப்பிடித்த கிராம மக்கள்
மல்லிக்குட்டை ஊராட்சி ஏரியில் குறிப்பிட்ட அனுமதியை விட 20 அடி ஆழத்திற்கு மேல் தோண்டி மண் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது மல்லிக்குட்டை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஏரியில் இரண்டு நாட்களாக அதிக பாரம் ஏற்றும் டிப்பர் லாரிகளில் ஏரிகளில் இருந்து கிராவல் மண் எடுத்துச் செல்லப்பட்டது.
இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர். இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறும்போது இரண்டு நாட்களாக அதிக பாரம் ஏற்றும் டிப்பர் லாரிகளில் ஏரியிலிருந்து கிராவல் மண் கடத்தி வருகின்றனர். இதுகுறித்து டிப்பர் லாரி உரிமையாளரிடம் கேட்டால் அரசு அனுமதியுடன் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஓசூர்-அதியமான் கோட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு எடுத்துச் செல்கின்றோம் என்று தெரிவிக்கின்றனர்.
மண் எடுப்பதற்கான அனுமதி சீட்டு இல்லாமல் எடுத்துச் செல்கின்றனர். மேலும் ஏரியில் குறிப்பிட்ட அனுமதியை விட 20 அடி ஆழத்திற்கு மேல் தோண்டி மண் எடுக்கப்பட்டதால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 5 ஆயிரம் லோடுகளுக்கு மேல் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் எங்கள் கிராமத்திற்கு வரும் தார் சாலை குண்டும் குழியுமாக சிதிலமடைந்துள்ளது.
அதிகளவில் பள்ளம் தோண்டி கிராவல் மண் எடுப்பதால் மழைக்காலங்களில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மல்லிகுட்டை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர்ஊர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதனை அடுத்து வழக்கம் போல் டிப்பர் லாரிகளில் மண் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.