நல்லம்பள்ளி அருகே வன்னிமரம் குத்துதல் திருவிழா
சென்ன கேசவப் பெருமாள் கோவிலில் வன்னிமரம் குத்துதல் திருவிழா நடந்தது. வன்னி மர இலைகளை வீட்டில் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை;
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள இலளிகம் பகுதியில் சென்ன கேசவப் பெருமாள் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக் கிராமத்தில் தகடூரை ஆண்ட வள்ளல் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனியை தந்து அக்னியை தலவிருட்சமாக கொண்டு வைணவம் வளர்த தலம் என கூறப்படுகிறது.
இக்கோவிலில் வருடம் தோறும் நவராத்திரி மற்றும் விஜயதசமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டும் நவராத்திரி மற்றும் விஜயதசமி விழா நடை பெற்றது. இதையொட்டி திருவிழாவின் இறுதி நாளில் வன்னிமரம் குத்துதல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் சாமி, வள்ளி, தெய்வானை சமேத பாலதண்டாயுதபாணி சாமி, அங்காள பரமேஸ்வரி, குறிஞ்சி மாரியம்மன், விநாயகர் மற்றும் பொன்னியம்மன் உட்பட அனைத்து உற்சவ மூர்த்திகளும் ஒரு சேர திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து வன்னி மரம் மற்றும் வாழை மரத்தை அசுரனாக வதம் செய்து ஒரு சேர திருவீதி உலா காணும் வெற்றி திருவிழாவாக நடைபெற்றது. வதம் முடிந்த வன்னி மர இலைகளை வீட்டில் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றியடையும் என ஐதீகம். இதனால் வன்னிமர இலைகளை பக்தர்கள் எடுத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து மயிலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு தெய்வங்களை வழிபட்டு சென்றனர். மேலும் விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.