டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி: இருவர் கைது
ரூ.10 லட்சத்தை வங்கியில் இருந்து ரூ.500 நோட்டுகளாக எடுத்து கொடுத்தால், அதற்கு பதிலாக ரூ.13 லட்சத்துக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக தருவதாக கூறி மோசடி
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே கருத்தானூரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சுரேஷ் (வயது31). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
சுரேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு வாகனத்தை விற்றுவிட்டார். இதற்காக அவருக்கு ரூ.10 லட்சம் பணம் கிடைத்தது. அந்த பணத்தை தனது வங்கியில் போட்டிருந்தார்.
இதையறிந்த அவரது நண்பர் நடூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனக்கு தெரிந்த முக்கிய பிரமுகர் ரூ.3,200 கோடிக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக வைத்துள்ளார் என்றும், அதனை மாற்ற முடியாமல் தவித்து வருவதாகவும், அதற்காக உன்னிடம் உள்ள ரூ.10 லட்சத்தை வங்கியில் இருந்து ரூ.500 நோட்டுகளாக எடுத்து கொடுத்தால், அதற்கு பதிலாக அவர்கள் ரூ.13 லட்சத்துக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக தருவார்கள். அதில் ரூ.10 லட்சத்தை எடுத்து கொண்டு மீதமுள்ள பணத்தை சரிசமமாக பிரிந்து கொள்ளலாம் என்று சுரேஷிடம் கூறினார்.
நண்பர் கூறிய ஆசை வார்த்தையை நம்பிய சுரேஷ் வங்கியில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து அதனை ஒரு பையில் போட்டு வந்தார். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு சுரேஷ், அவரது தந்தை நாகராஜ், ராஜேந்திரன் ஆகிய 3 பேரும் காரில் தர்மபுரியை அடுத்த நல்லம்பள்ளிக்கு வந்தனர். அப்போது 3 பேரும் அந்த முக்கிய பிரமுகரின் ஏஜெண்டை தொடர்பு கொண்டனர்.
அவர் காரை அங்கேயே விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தான் கூறிய இடத்திற்கு வருமாறு சுரேஷிடம் கூறியுள்ளார். உடனே மூவரும் மோட்டார் சைக்கிளில் ஏஜெண்டு கூறிய இடத்திற்கு வந்தனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் இருவர் கையில் பையுடன் அங்கு வந்தனர்.
மர்மநபர்கள் சுரேஷிடம் இருந்து பையை வாங்கி கொண்டனர். அதற்கு பதிலாக மர்மநபர்கள் கொண்டு வந்த பையை சுரேஷிடம் கொடுத்தனர். உடனே மர்ம நபர்கள் சுரேஷிடம் இங்கு இருந்தால் நமக்கு ஆபத்து என்றும், உடனே இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார்.
அதனை நம்பிய சுரேஷ் உள்பட 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது சுரேஷ் சிறிது தூரம் சென்ற பிறகு மர்மநபர்கள் கொடுத்த பையை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு பதிலாக வெள்ளைதாள்கள் பணகட்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
உடனே திரும்பி 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று அவர்களை தேடிப்பார்த்தனர். அதற்குள் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து பணத்துடன் மாயமாகி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சுரேஷ் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஏரியூர் சீலநாயக்கனூரைச் சேர்ந்த முருகன் (45), அவரது நண்பர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து கைதான 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிராவல்ஸ் அதிபர் ரூ.13 லட்சத்திற்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக கிடைக்கும் என்று ஆசைப்பட்டு ரூ.10 லட்சத்தை இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.