தர்மபுரி மாவட்டம் முழுவதும் வரும் 30ம் தேதி 28வது மெகா தடுப்பூசி முகாம்
தர்மபுரி மாவட்டம் முழுவதும் வரும் 30ம் தேதி 28வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையாக கட்டுபடுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், வரும் 30ம் தேதி, சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 700 சிறப்பு முகாம்களில் 100 தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுபட்டு போன முன்களப்பணியாளர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளாதவர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 முதல் 14 வயதுடைய மாணவ மாணவியர்கள் தவறாமல் Cortravax தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் ஜூன் 2021-க்கு முன் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்காப்பணியானார்கள் ஆகியோர் அனைவரும் தவறாது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள்ள வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு ரூ.500- அரசு விதிப்படி அபராதம் வசூலிக்கப்படும். அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். பள்ளிகள், கல்லுாரிகள் ஆகிய கல்வியியல் நிலையங்களில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் முககவசம் அணிந்து வருவதை பள்ளி கல்லூரி நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும்.
மேலும், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் மக்கள், கோவிட் அறிகுறி தென்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் RTPCR பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.