மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் பணியிட மாற்றம்
பாலியல் தொந்தரவு கொடுத்த கணித ஆசிரியர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு அரசு மாதிரி பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுமதிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் காரிமங்கலம் அருகே உள்ள கெரகோடஅள்ளி பகுதியில் அரசு மாதிரி பள்ளியை கடந்த 2013 -ம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது.
இப்பள்ளியில் சுமார் 630 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 21 இருபால் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் பாலகோடு அருகே உள்ள மல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷா நவாஸ். இவர் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கணித பாடம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பள்ளியில் பயின்ற 8-ம் வகுப்பில் படிக்கும் ஒரு சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக சம்பந்தபட்ட மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரனிடம் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்காமல் பாலக்கோடு அருகே உள்ள ஜக்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்த ஆசிரியை ஒருவரை கெரகோட அள்ளி அரசு மாதிரி பள்ளிக்கு பணி மாறுதல் செய்துவிட்டு பாலியல் தொந்தரவு செய்த ஷாநவாசை ஜக்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணி மாறுதல் செய்துள்ளார்.
பாலியல் தொந்தரவு செய்த கணித ஆசிரியருக்கு எந்தவித தண்டனையும் வழங்காமல் பெயரளவுக்கு மட்டுமே பணி மாறுதல் செய்ததால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் இது சம்மந்தமாக விசாரணை மேற்கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்த கணித ஆசிரியர் ஷாநவாஸ் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.