தர்மபுரியில் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் குறித்த சிறப்பு முகாம்
தர்மபுரியில் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் குறித்த சிறப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாயன்று நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளதாவது: கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய்கிழமை அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு கீழ் காணும் திட்டபணிகளை மேற்கொள்ள சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படும்.
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து பல வருடங்கள் கடந்தும் வைப்புத்தொகை இரசீதுகள் கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுதொகை கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் ஆகியோர் கீழ்கண்ட உரிய சான்றுகளோடு ஆஜராகி இச்சிறப்பு குறைதீர் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார் .
இத்திட்டத்தில் பதிவுசெய்து நாளது தேதி வரை வைப்புத்தொகை தொகை இரசீதுகள் கிடைக்கப்பெறாத பயனாளிகள் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்த ஒப்புகை ரசீதுடன் கூடிய இணையவழி விண்ணப்பத்துடன் இச்சிறப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பதிவு செய்து வைப்புத்தொகை ரசீது பெற்று 18 வயது பூர்த்தியடைந்து முதிர்வு தொகை கிடைக்க பெறாத பயனாளிகள் வைப்புத்தொகை ரசீது நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பிறப்பு சான்றிதழ், பயனாளியின் நடப்பில் உள்ள வங்கிக்கணக்கு முகப்பு புத்தக நகல், பயனாளியின் (தாய் மற்றும் மகள்) வண்ணப்புகைப்படம்-2 ஆகிய சான்றுகளோடு இச்சிறப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
மேலும் திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு தர்மபுரி மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்சாந்தி தெரிவித்துள்ளார்.