16 கிராமங்கள் ஒன்றிணைந்து நடத்திய கோவில் திருவிழா
தர்மபுரி அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 16 கிராமங்கள் ஒன்றிணைந்து நடத்திய செங்காளியம்மன் கோவில் திருவிழா
தர்மபுரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் செங்காளியம்மன் கோவில் திருவிழா, 17 ஆண்டுகளுக்கு பின் கடந்த 25-ம் தேதி கொடியேற்ற, கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
இதனை தொடர்ந்து 16 கிராமத்து மக்கள் ஒன்று சேர்ந்து பட்டாளம்மன், ஊர் மாரியம்மன், மாரியம்மன், காளியம்மன் ஆகிய அனைத்து கோவிலுக்கும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று மண்டு மாரியம்மன் சாமிக்கு கங்கை பூஜை மற்றும் ஏர்ஓட்டுதல், விதை விதைத்தல், கூழ்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வீரபத்திரசுவாமி பூஜை செய்து, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபடும் நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு பட்டாளம்மன் கோவிலில் இருந்து குதிரை சக்தி கரகம் கொண்டு வந்து, கிருஷ்ணாபுரம் மண்டு மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து வீட்டிற்கு வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர் பிரசித்தி பெற்ற நிகழ்வான மண்டு மாரியம்மன் கோவில் முன்பு, கரகம் தலை கூடுதல் நிகழ்ச்சி பம்பை, தாரை தப்பட்டை வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கையுடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து இன்று மண்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் எருது கட்டும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கரகப் பூமாலைகள் கிணற்றில் விடுதல் நிகழ்ச்சியும், இதை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை பூப்பத்திரி வழங்குதல் நிகழ்ச்சியுடன் கோவில் விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணாபுரம், ஆண்டிஅள்ளி மற்றும் கொண்டம்பட்டி ஆகிய மூன்று ஊராட்சிக்குட்பட்ட 16 கிராமங்களைச் சேர்ந்த விழாக்குழுவினர், தர்மகர்த்தாக்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.