காணாமல் போன சிறுவர்களை 36 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்
பொம்மிடியில் காணாமல்போன இரண்டு சிறுவர்களை 36 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.;
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ஓமலூர் சாலையில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருப்பவர் சீனு (வயது 47) இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் அவரது மகன் நிஷாந்த் (13) வயது பொம்மிடி அருகே உள்ள நடூர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டில் அருகில் உள்ள இஸ்மாயில் மகன் சையது பாஷா (15). நண்பர்களான நிஷாந்தும், சையது பாஷாவும் கடந்த 15ம் தேதி விளையாடச் சென்றனர்.
இந்த நிலையில் மாலை நீண்ட நேரமாகியும் விளையாட சென்ற இரண்டுசிறுவர்களும் வீடு திரும்பவில்லை. இரவு 10 மணி வரை சிறுவர்களை பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை, இதனால் பதட்டம் அடைந்த சிறுவர்களின் பெற்றோர்கள் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இரண்டுசிறுவர்கள் பொம்மிடி பகுதியில் காணாமல் போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) லதா வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவர்களை தேடிவந்தனர். காணாமல் போன 2 சிறுவர்களையும் மீட்கும் பணியில் பொம்மிடி காவல்துறையினர் தீவிரம் காட்டினார்.
காணாமல் போனது பற்றிய தகவல் அனைத்து காவல் நிலையங்களுக்கும், உதவி மையங்களுக்கும் அனுப்பப்பட்டது. இதன் பேரில் காணாமல் போன இரண்டுசிறுவர்களும் திருச்சி ரயில் நிலைய காவலர்களால் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிறுவர் பாதுகாப்பு மையத்தில் விடப்பட்டுள்ளதாகவும் பொம்மிடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது வாட்ஸ் சப் மூலம் சிறுவர்கள் புகைப்படத்தினை அனுப்பி மாயமானது அவர்கள் தான் என உறுதி செய்தனர்.
அதன் பெயரில் காணாமல் போன இரண்டு சிறுவர்களையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு காவல்துறையினர் திருச்சி விரைந்து உள்ளனர். காவல்துறையினர்விரைந்து செயல்பட்டு மாயமான 2 சிறுவர்களையும் மீட்டது குறித்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.