குறைதீர் முகாமில் மனு அளிக்க வந்த வந்தவர்கள் தீக்குளிக்க முயற்சி
மண்எண்ணையை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றவரை சமாதானப்படுத்தி மீண்டும் ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.;
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குறைதீர் முகாமிற்கு வந்த ஒரு பெண் மண்எண்ணை கேன் எடுத்து வந்து திடீரென்று தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், அந்த பெண்ணை தடுத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த பெண் தர்மபுரி மாவட்டம், முத்தம் பட்டியை அடுத்த மங்களகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி பழனியம்மாள் என்பது தெரியவந்தது. இவர் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரிடம் நிலம் வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் வீட்டை அபகரிக்கும் எண்ணத்தில் தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தனக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அங்கிருந்த காவல்துறையினர்அவரிடம் சமாதானம் பேசி மீண்டும் ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.
இதேபோல் கோணங்கி நாயக்கன அள்ளியை சேர்ந்த சிவனேசன் என்பவர் மனு கொடுக்க இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைக்க முயன்றார். அவரையும் காவல்துறையினர் மீட்டு விசாரித்தனர்.
இதில், சிவனேசனின் பக்கத்து நிலத்தை சேர்ந்த வரான ஆறுமுகம் என்பவரின் மகன்கள் சிவசங்கர், சரவணன், ராஜ சேகர் ஆகிய 3 பேரும் அவருக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் செல்லும் பொது வழிப்பாதையை நீக்கி விட்டு விவசாய நிலமாக மாற்றி அபகரிக்க முயற்சி செய்தனர். இதுகுறித்து அவர் தட்டிகேட்டதற்கு மூவரும் தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரியவந்தது.
இது தொடர்பாக கடந்த மாதம் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தும் இது வரை எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. உடனே அங்கிருந்த காவல்துறையினர் சிவனேசனை சமாதானம் பேசி மனு கொடுக்க அனுமதித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத் தீர்க்கும் முகாமில் மனு கொடுக்க வந்த இருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.