அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அறைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்: காவல்துறை விசாரணை
கடத்தூர் அருகே அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுங்கரஅள்ளி நடுநிலைப் பள்ளியில் 152 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். தீபாவளி விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளி திறக்கப்பட்டதும். பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி தனது அறையை திறந்தார்.
அப்போது அறையில் இருந்த பிளாஸ்டிக் சேர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்குவதற்காக வைக்கப்பட்டு இருந்த அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கடத்தூர் காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்தார். தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதில் மர்ம நபர்கள் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளிக்குள் நுழைந்து, தலைமை ஆசிரியர் அறையின் ஜன்னலை திறந்து தீ வைத்து சென்றிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கு சுற்றிச்சுவர் இல்லாததால் பல நேரங்களில் மர்ம நபர்கள் மது குடிப்பதற்காக பள்ளி கட்டிடப்பகுதியை பயன்படுத்தி வருகின்றதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.