வடையில் பல்லி, கடைக்காரருக்கு அபராதம்
வடையில் இறந்த பல்லி ஒன்று இருந்ததை கண்டு கடை உரிமையாளரிடம் காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது;
தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகே கந்தசாமி வாத்தியார் தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் விற்பனை செய்த மெதுவடையை சண்முகம் என்பவர் வாங்கி சாப்பிட வடையை பிரித்த போது அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதனையடுத்து கடை உரிமையாளரிடம் காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் நேரடி விசாரணை நடத்தினர். மேலும் அந்த கடை சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கடையை சுகாதாரமாக வைக்க அறிவுறுத்தியதோடு மீண்டும் தாங்கள் சோதனைக்கு வரும் போது சுகாதாரமற்ற முறையில் இருந்தால் கடையை சீல் வைக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் தர்மபுரி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுத்தியது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தர்மபுரி நகரில் சாலையோர கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் மற்றும் பலகாரங்கள் விற்கப்படுகின்றன. மேலும் அசைவ உணவகங்களில் தரமான இறைச்சிகள் மூலமாக உணவுகள் தயாரித்து விற்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் வடையில் பல்லி இருக்கும் இது போன்ற அவலங்கள் நடக்காது என்று கூறினர்