பணியின்போது உயிரிழந்த வாரிசுகளுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கல்

தருமபுரியில் பணியின்போது உயிரிழந்த 3 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் பணிநியமன ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.

Update: 2022-11-07 15:40 GMT

தருமபுரியில் பணியின்போது உயிரிழந்த 3 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் பணிநியமன ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தலைமையில் இன்று (07.11.2022) நடைபெற்றது.

இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 439 மனுக்கள் வரப்பெற்றன.

இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் சத்துவணவு திட்டத்தின் கீழ் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பேளார அள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு மைய அமைப்பாளராக பணிபுரிந்து வந்த கோ.சண்முகம் பணியிடையில் மரணமடைந்ததை முன்னிட்டு, அவரது வாரிசுதாரரான அவரது மனைவி கோ.புஷ்பா என்பவருக்கு பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பி.கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கான பணிநியமன உத்தரவு ஆணையினை வழங்கினார்.

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், ஏ பாப்பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு மைய அமைப்பாளராக பணிபுரிந்து வந்த கோ.பிரகாசம் என்பவர் பணியிடையில் மரணமடைந்ததை முன்னிட்டு, அவரது வாரிசுதாரரான அவரது மகள் பி. சுகன்யா என்பவருக்கு பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், கிட்டன் அள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கான பணிநியமன உத்தரவு ஆணையினையும், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சென்றாயம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு மைய சமையலராக பணிபுரிந்து வந்த சின்னபிள்ளை பணியிடையில் மரணமடைந்ததை முன்னிட்டு, அவரது வாரிசுதாரரான அவரது மகள் கோ முருகம்மாள் என்பவருக்கு காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பந்தார அள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு மைய சமையலர் பணியிடத்திற்கான பணிநியமன உத்தரவு ஆணையினையும் மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பேகாரஅள்ளி, குட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரா. முத்து என்பவருக்கு ரூ.1,000/- மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று வழங்கினார்.

மேலும், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான வெங்கடேஷன், விஜயகுமார் மற்றும் அண்ணாமலை ஆகிய மூவரும் சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 8-வது மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்று வருகின்ற நவம்பர் 11 முதல் 13 வரை அசாம் மாநிலம், கௌகாத்தியில் தேசிய அளவில் நடைபெற உள்ள பாரா நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ளமைக்காக மாவட்ட ஆட்சியர் சாந்தியை இன்று நேரில் சந்தித்து, தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வெ. தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் (பொ) / மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெ.ஜெயக்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம் ) வி.கே.சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வி.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி ) மரியம் ரெஜினா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News